Last Updated:
ராஜஸ்தானில் போலி ஆவணங்களுடன் 2 வருடமாக போலீஸ் அகாடமியில் சப்இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்ற பெண் சிக்கியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் நாக்வார் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள் மோனா புகாலியா தான் அந்த பெண். 23 வயதான, மோனாவுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக வண்டும் என்பது கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கிய மோனா, காவல் உதவி ஆய்வாளர் ஆட்சேர்ப்புத் தேர்வுக்கு முறையாகத் தயாரானார். தேர்வையும் எழுதினாள். ஆனால், அவர் எவ்வளவு முயற்சி செய்தாலும், தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.
இங்கிருந்துதான் அவரது மனம் சதி வலையை பின்னத் தொடங்கியது. மோனாவால் தன் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், சப்-இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டதாக ஒரு செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கிறார். அதைப் பார்த்த பலரும் மோனாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பாராட்டத் தொடங்கினர். வாழ்த்து மழையில் நனைந்த மோனாவுக்கு புகழ்போதை தலைக்கேறியிருந்தது. இந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அவரை மீண்டும் திரும்பி வர முடியாத நிலைக்கு அழைத்துச் சென்றன
அதன் பிறகு, மோனா ஒரு அற்புதமான திட்டத்தை அரங்கேற்றினார். தனது பெயரை மூலி தேவி என மாற்றிக் கொண்டு போலி ஆவணங்களை தயார் செய்தார். ராஜஸ்தான் போலீஸ் அகாடமியின் குறைபாடுகளைப் பயன்படுத்தி தான் தேர்ச்சி பெற்றதாகக் கூறி உள்ளே நுழைந்திருக்கிறார். விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கை பெற்றதாகக் கூறி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளார். இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியாளர்களுக்கான வாட்ஸ்அப் குழுவிலும் மூலி தேவி என்ற அடையாளத்துடன் இணைந்துள்ளார். இரண்டு வருடங்களாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமி மைதானத்தில் பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயிற்சி பெற்றிருக்கிறார் மோனா
மூத்த அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். காவல்துறை அதிகாரி உடையில் சமூக ஊடகங்களில் ஊக்கமளிக்கும் ரீல்ஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். தொழில் விழிப்புணர்வு கருத்தரங்குகளில் பங்கேற்று, மோட்டிவேஷன் உரைகளையும் நிகழ்த்தியுள்ளார். வருகைப் பதிவின் போது பிடிபடாமல் இருக்க, மோனா உட்புற வகுப்புகள் மற்றும் செயல்பாடுகளில் ஒருபோதும் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில், மோனா சப்-இன்ஸ்பெக்டருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை எடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
இத்தனை நுணுக்கமாக ஏமாற்றிய போதும் மோனா புகாலியா ஒரு இடத்தில் தவறு செய்தார் உடன் பயிற்சி பெற்ற சப் இன்ஸ்பெக்டருடன் அவர் வாட்ஸ் ஆப் குழுவில் சண்டையிட்டுள்ளார். இதனால் மோனா யார்? என அறிய அந்த சப்இன்ஸ்பெக்டர் துப்பறியும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் மட்டும் கண்டுபிடிக்கவில்லைஎன்றால் மோனா இந்நேரம் பயிற்சி முடித்து ஒரு சப்இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்திருப்பார்.
அவர் உயர் அதிகாரிகளிடம் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மோனா வசமாக சிக்கிக்கி கொண்டார். விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மோனா, தனது குடும்பதினரை திருப்திப்படுத்தவும், போலீஸ் வேலையில் கிடைக்கும் மரியாதைக்காகவும் இந்த மோசடியைச் செய்ததாக தெரிவித்தார். அவரது வீட்டில் இருந்து போலி ஆவணங்கள், 7 லட்சம் ரொக்கம், போலீஸ் அகாடமி வினாத்தாள்கள் மற்றும் போலி சீருடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
July 07, 2025 9:07 AM IST