கத்தார் தலைநகர் தோஹாவில் இளம் வீரர்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை 7ஆவது சீசன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்தியா-ஏ மற்றும் யுஏஇ அணிகள் இந்த தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் நேற்று விளையாடின. முதலில் பேட் செய்த இந்தியா-ஏ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 42 பந்துகளில் 144 ரன்கள் எடுத்திருந்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார். 32 பந்துகளில் அவர் சதம் விளாசி அசத்தினார்.
298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய யுஏஇ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 148 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா-ஏ அணி வெற்றி பெற்றது. வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இது வைபவ் சூர்யவன்ஷியின் இரண்டாவது டி20 சதமாகும். இதற்கு முன்பு ஐபிஎல் 2025 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
இதற்கிடையே, இந்த தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் மோதல் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டியில் இந்தியாவின் உர்வில் படேல் மற்றும் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் சதம் அடித்திருந்தனர். அதற்கடுத்து வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசியிருக்கிறார். இதன்மூலம் டி20 போட்டியில் இரண்டாவது வேகமான சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் என்கிற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

