Last Updated:
பொருளாதார நிலையை காரணம் காட்டி “இஸ்லாமியக் குடியரசு ஒழிக” என்ற கோஷத்தை முன்வைத்து, மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர்.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் 15 நாட்களை கடந்தும் தீவிரம் குறையாமல் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெஹ்ரான் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் மக்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 1979- ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த ஆட்சி வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
‘Death to the Dictator’ இந்த முழக்கத்தை தான் ஈரான் மக்கள் முன்வைத்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானில் பணவீக்கம் சுமார் 48 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளதால், சாமானிய மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.
ஈரானிய நாணயமான ‘ரியால்’ அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தற்போது 1 டாலர் என்பது சுமார் 14 லட்சம் ரியால் என்ற நிலையை எட்டியுள்ளது. பொருளாதார நிலையை காரணம் காட்டி “இஸ்லாமியக் குடியரசு ஒழிக” என்ற கோஷத்தை முன்வைத்து, மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர் 1979- ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த ஆட்சி வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 1979- ஆம் ஆண்டில் ஈரானில் நடந்தது என்ன?
ஈரானை 2,500 ஆண்டுகளாக பல மன்னர்களும் அவர்களின் வாரிசுகளும் ஆண்டு வந்தனர். ஈரானின் கடைசி பேரரசு பஹ்லவி வம்சம். முகமது ரெசா ஷா பஹ்லவி தான் கடைசியாக ஈரானை ஆட்சி புரிந்த மன்னர்… தீவிர அமெரிக்க ஆதரவாளரான முகமது ரெசா ஷா பஹ்லவி, நாட்டை மேற்கத்திய கலாசாரத்தில் தள்ளுவதாக நீண்ட காலமாக இஸ்லாமிய மதகுருமார்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
மதகுருமார்களின் தூண்டுதலால் மக்களும் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். மக்கள் போராட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஈரானை 37 ஆண்டுகளாக ஆண்டு வந்த மன்னர் முகமது ரெசா ஷா பஹ்லவி எகிப்திற்குத் தப்பிச் சென்றார். 15 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மதத் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி, மன்னர் வெளியேறிய பின் பாரிஸிலிருந்து ஈரான் திரும்பினார். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் தெஹ்ரான் விமான நிலையத்தில் திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
ராணுவம் நடுநிலை வகிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மன்னரின் எஞ்சிய விசுவாசப் படைகள் தோல்வியடைந்தன. அன்றுடன் ஈரானின் 2,500 ஆண்டுகால மன்னராட்சி முறை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. அப்போது நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 98% மக்கள் ஈரானை “இஸ்லாமியக் குடியரசாக” மாற்ற ஆதரவளித்தனர். கொமேனி நாட்டின் “உயரிய தலைவர்” ஆனார். ஈரான் புரட்சிக்கு முன்னர், பெண்கள் மினி ஸ்கர்ட் போன்ற நவீன ஆடைகளை சுதந்திரமாக அணிந்தனர். ஹிஜாப் அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தது.
புரட்சிக்கு பின் அனைத்துப் பெண்களும் பொது இடங்களில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை மீறுபவர்களுக்குச் சிறைத்தண்டனை அல்லது கசையடி வழங்கப்பட்டது. 1975-ல் ‘குடும்பப் பாதுகாப்புச் சட்டம்’ மூலம் பெண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கப்பட்டது. பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
புரட்சிக்கு பின் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயது 18-லிருந்து 9 ஆக குறைக்கப்பட்டது. விவாகரத்து மற்றும் குழந்தைகளின் காவல் உரிமை ஆண்களின் வசம் சென்றது. புரட்சிக்குப் பிறகு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி வகுப்புகள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் சில துறைகளில் பெண்கள் கற்கத் தடை விதிக்கப்பட்டாலும், பின்னாளில் பெண்கள் அதிகளவில் கல்வி கற்றனர். தற்போது பல்கலைக்கழக மாணவர்களில் 60% பேர் பெண்களே என்பது ஒரு முரண்பாடான உண்மை.
பெண்கள் நீதிபதிகளாகப் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டது.. அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டது. ஈரானில் 2 பெண்களின் வலிமை மற்றும் புத்திக்கூர்மை 1 ஆணிடம் இருப்பதாக கருதப்படுகிறது. சொத்துரிமையிலும் பெண்களுக்கு ஆண்களை விடக் குறைவான பங்குகளே வழங்கப்படுகின்றன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து தான் மக்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்…


