Last Updated:
ரஷ்யாவில் பாஷ்கிர் மருத்துவப் பல்கலைக்கழக மாணவர் அஜித் சிங் சவுத்ரி 19 நாட்கள் காணாமல் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் காணாமல்போன இந்திய மாணவர் 19 நாட்களுக்குப் பின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர்கள் பலர் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகின்றனர். இதில், ராஜஸ்தானில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்த அஜித் சிங் சவுத்ரி என்பவர் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படிக்க சென்றார். இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு பாஷ்கிரில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அஜித் சிங், கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியே சென்றுள்ளார்.
காலை 11 மணியளவில் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் காணவில்லை என்பதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் எந்தவொரு துப்பும் கிடைக்காதால் வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளை நதியை ஒட்டிய அணையில் அஜித் சிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அருகே அவரின் செல்போன் மற்றும் காலணிகளும் கிடைத்துள்ளன. காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு 19 நாட்களுக்குப் பின் இந்திய மாணவரின் உடல் கிடைத்துள்ளதால், அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தனது மகனை எப்படியாவது மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்ற வேட்கையில், அஜித் சிங்கின் பெற்றோர் கடன் வாங்கி அவரை ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்க அனுப்பியுள்ளனர்.
மருத்துவம் படித்து முடித்துவிட்டு தங்களது குடும்பத்தை கவனித்துக் கொள்வார் என்ற பெரும் கனவோடு இருந்த பெற்றோருக்கு, அஜித் சிங்கின் மரண செய்தி தலையில் இடியாய் விழுந்துள்ளது. மருத்துவ மாணவரின் உடலை இந்தியா கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில், மாணவரின் மரணம் தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்ம் என இந்திய தூதரகம் உறுதியளித்துள்ளது.
November 08, 2025 3:39 PM IST


