சிங்கப்பூரின் SG60ஆம் ஆண்டு நிறைவு மற்றும் இன நல்லிணக்க மாதமாக அடுத்த ஜூலை மாதம் கொண்டாடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு, அனைத்து சமயங்களை சேர்ந்த சிங்கப்பூரர்கள் நாட்டின் பழமையான நான்கு இந்து கோயில்களுக்குச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்து அறக்கட்டளை வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சியினால், பிற மத நம்பிக்கைகளை கொண்ட சிங்கப்பூரர்கள் இந்து கோயில்களின் பாரம்பரிய மரபுகள், வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.
மேலும் அந்த நான்கு கோவில்களும் சிங்கப்பூரில் 1800களில் இருந்து சமூகத்திற்கு சேவை செய்து வருகின்றன. அதில் இரண்டு கோவில்கள் தேசிய நினைவுச்சின்னங்களாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பழமையான அந்த 4 கோவில்கள், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகியவை ஆகும்.
குறிப்பிட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில், பார்வையாளர்கள் கோவில்களை சுற்றிப்பார்த்து, புனித கலைப்பொருட்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சிகள், பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்.
கையால் தயாரிக்கப்படும் மாலை மற்றும் தோரணம் போன்ற கைவினை செயல்பாடுகளையும் பார்வையிடலாம் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், பார்வையாளர்கள் தென்னிந்திய கோயில் உணவு வகைகளையும் சுவைக்கலாம் என்றும் பிரத்தியேக நினைவு பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேதி மற்றும் நேரம்
அதாவது, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கோயில்களைப் பார்வையிடலாம்.
கெலாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் கோயில் வரும் ஜூலை 5 ஆம் தேதியும், சைனாடவுனில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் வரும் ஜூலை 12 ஆம் தேதியும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
தோ பாயோவில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் வரும் ஜூலை 19 ஆம் தேதியும், செராங்கூனில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் வரும் ஜூலை 27 ஆம் தேதியும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
பார்வையாளர்கள் https://bit.ly/hnfs25 என்ற இந்த இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.
இந்த புனித தலங்களுக்கு செல்லும்போது, ஷார்ட்ஸ் அல்லது தோள்பட்டை தெரியும்படியான மேலாடைகளை அணிவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுவதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/tamil_dailysg/