Singapore Work Passes: வேலை அனுமதியை (Work pass) போலியான முறையில் 18 வெளிநாட்டு ஊழியர்களுக்கு விற்க சதித் திட்டம் தீட்டியவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த 18 பேருக்கும் சிங்கப்பூரில் தங்குவதற்கு விருப்பம் இருந்துள்ளது, ஆனால் வேலை செய்ய எந்த எண்ணமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் ஊழியருக்கு சிறைத் தண்டனை
வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் கீழ், 36 வயதான சிம் கியான் பூன் டெரன்ஸ் என்ற ஆடவர் ஆறு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை நேற்று முன்தினம் (மே 13) ஒப்புக்கொண்டார்.
மேலும் இதே போன்ற 12 குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகள் மற்றும் S$32,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத்தை அவரால் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியதால், அதற்கு பதிலாக அவர் இரண்டு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த சதித் திட்டம், போலி நிறுவனங்களையும், சிங்கப்பூரில் உண்மையில் வேலை ஏதும் செய்யாமல் தங்க விரும்பும் வெளிநாட்டினருக்காக நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது.
இந்த போலி நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தன. ஆனால் உண்மையில், அந்நிறுவனங்கள் போலியாக இருப்பதால் அவர்களுக்கு எந்த வெளிநாட்டவர்களும் தேவையில்லை.
இந்த சம்பவம் COVID-19 தொற்றுநோய் காலத்தில் நடந்தது என்று கூறப்பட்டுள்ளது.

