Last Updated:
முகேஷ் சவுத்ரி 18ஆம் எண் ஜெர்சி அணிந்து விளையாடியது விராட் கோலி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ‘ஏ’ விளையாடிய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி 18ஆம் எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடியது சர்ச்சையை கிளப்பியது.
கடந்த மே மாதம் 12ஆம் தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து தொடருக்கு முன்பு தனது ஓய்வை விராட் கோலி அறிவித்தது அவரது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தான், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ‘ஏ’ விளையாடிய போட்டியில் முகேஷ் சவுத்ரி 18ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விராட் கோலி தனது ஓய்வை அறிவித்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவரது ஜெர்சி எண்ணை அணிந்து எப்படி விளையாடலாம் என முகேஷ் சவுத்ரியை விமர்சித்தார்கள் விராட் கோலியின் ரசிகர்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் விளக்கமளித்துள்ளார். முகேஷ் சவுத்ரி விளையாடிய போட்டி பயிற்சிப் போட்டிதான் என்றும், பயிற்சிப் போட்டியில் யார் வேண்டுமானாலும், எந்த எண்ணைக்கொண்டும் விளையாடலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், சர்வதேச போட்டியில் அவர் விளையாடும்போது அவர் ஏற்கனவே விளையாடிய ‘49’ஆம் எண்ணை அணிந்து விளையாடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ விதிமுறைகளிலோ அல்லது ஐசிசி விதிமுறையிலோ ஒரு ஜெர்சி எண்ணை ஓய்வு படுத்துவது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. சச்சின் டெண்டுல்கரின் 18ஆம் எண் ஜெர்சியையோ அல்லது தோனியின் 7ஆம் எண் ஜெர்சியையோ பிசிசிஐ ஓய்வுபடுத்தவில்லை.
ஆனால், மற்ற வீரர்கள் அந்த எண் கொண்ட ஜெர்சி எண்களை அணிந்து, அதன் மூலம் வரும் சுமையை சுமக்க விரும்பவில்லை. எனவேதான் அந்த ஜெர்சி எண்களை அடுத்து வந்த வீரர்கள் அணியவில்லை.
ஆனால், ஷர்துல் தாக்கூர் மட்டும் 10ஆம் எண் ஜெர்சியை அணிந்து ஒருமுறை விளையாடினார். ரசிகர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் தனது ஜெர்சி எண்ணை மாற்றிக்கொண்டார்.
June 03, 2025 2:50 PM IST


