Last Updated:
தனது உயிரைப் பொருட்படுத்தாமல் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன
இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ப்ளை துபாய் விமானத்தின் விமானி அறைப் பகுதிக்குள் நடைபெற்ற தாக்குதலில், 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி காயமடைந்த இந்திய தலைமை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் மனைவி சோனல் மச்சார், சி.என்.என்-நியூஸ்18 செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
தனது கணவருக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து முதன்முதலில் கேள்விப்பட்டபோது தான் மிகவும் நிலைகுலைந்து போனதாக சோனல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “தாக்குதல் நடந்த செய்தியைக் கேட்ட தருணத்தில் நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். அதை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது எப்படி எதிர்வினையாற்றுவது என்ற மனநிலையோ தெளிவோ எனக்கு அந்த நிமிடத்தில் இருக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இருப்பினும், அந்த கடினமான சூழலில் குடும்பத்தினரும் நண்பர்களும் அருகில் இருந்து கொடுத்த ஆறுதலும், இந்திய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்களும் அவருக்கு தைரியமளித்துள்ளன. ஸ்மித்தின் உடல்நிலை சீராக உள்ளது என்பதை அறிந்த பிறகே அவரது பயம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததாகக் கூறினார்.
நேற்று தனது கணவரை நேரில் சென்று சந்தித்ததாகக் கூறிய சோனல், “அவரை நேரில் பார்த்த பிறகுதான் எனக்கு முழு நம்பிக்கை வந்தது. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) சிறந்த மருத்துவர்கள் மற்றும் ராணுவ மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில், சரியான பாதுகாப்பான கைகளில் இருக்கிறார். தற்போது எனது முழு கவனமும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதில்தான் உள்ளது. அதற்காகத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன்” எனக் குறிப்பிட்டார.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் பேச விருப்பம் தெரிவித்தது குறித்துக் கேட்கப்பட்டபோது, “என்னால் நேதன்யாஹுவிடம் பேச முடியாது. அதற்குப் பொருத்தமான நபர் ஸ்மித் தான். அவரே அவரிடம் பேசுவார். ஸ்மித் முழுமையாகக் குணமடைந்து சரியான மனநிலைக்கு வந்தவுடன் நிச்சயமாக இஸ்ரேல் பிரதமரிடம் பேசுவார்” என்று தெளிவுபடுத்தினார்.
டெல் அவிவ் நோக்கிச் சென்ற ப்ளை துபாய் விமானத்தில் காக்பிட் பகுதிக்குள் நுழைந்த நபரால் கேப்டன் ஸ்மித் மச்சார் தாக்குதலுக்கு உள்ளானார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தாக்குதல் நடத்திய நபர் கட்டுப்படுத்தப்பட்டு, விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தனது உயிரைப் பொருட்படுத்தாமல் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

