பிரான்சில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரக்பி போட்டியொன்றின் போது ஏற்பட்ட திடீர் விபத்தில் படுகாயமடைந்த கிளீ மெனியர் என்ற 17 வயது அமெச்சூர் வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘யூனியன் டு பேசின் மர்மண்டாய்ஸ்’ கழகத்தின் முன்களப் பின்கள வீராங்கனையான இவர், போர்டோவிலுள்ள பெல்லெக்ரின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ‘அஜென் அக்லோ ரக்பி’ அணிக்கு எதிரான 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியின் போதே இந்த “விபத்து” ஏற்பட்டுள்ளது. எனினும், வீராங்கனைக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை என்ன என்பது குறித்து அவரது விளையாட்டு கழகமோ அல்லது பிரெஞ்சு ரக்பி சம்மேளனமோ இதுவரை எவ்வித விபரங்களையும் வெளியிடவில்லை.
அவருக்குத் தீவிர சிகிச்சையளித்த அவசர சிகிச்சைப் பிரிவினருக்கு நன்றி தெரிவித்துள்ள ‘யூனியன் டு பேசின் மர்மண்டாய்ஸ்’ கழகம், “கிளீ மெனியரின் மறைவுச் செய்தி தாங்க முடியாத சோகத்தையும் விவரிக்க முடியாத வலியையும் ஏற்படுத்தியுள்ளது” என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.



