Last Updated:
மத்திய பிரதேசம் ஷிவ்புரியில் 17 வயது சிறுமியை காதல் நிராகரித்ததால் இளைஞர் கோடாரியால் 20 முறை தாக்கி தூக்கில் இட முயன்றார், சிறுமி தீவிர சிகிச்சை, இளைஞர் கைது
மத்திய பிரரேசத்தில் காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 20 முறை கோடாரியால் தாக்கிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. தொடர்ந்து சிறுமியை கயிறை கட்டி தொங்கவிட்ட கொடூரன் மீது கடும் நடவடிக்கை பாயுமா?
மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சந்தாவ்னி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரின் காதலை ஏற்க சிறுமி மறுத்துள்ளார். இதனால், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனியாக சென்ற சிறுமியை வழிமறித்து லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இருந்த போதும் சிறுமி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது காதலை ஏற்க மறுத்த சிறுமியை பழிவாங்க இளைஞர் சதித் திட்டம் தீட்டியுள்ளார். இந்த சூழலில் வெள்ளிக் கிழமை அன்று 17 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, இளைஞர் கோடாரியுடன் அங்கு சென்றுள்ளார். அதைக் கண்டதும் சிறுமி அச்சத்தில் உறைந்து போயுள்ளார். திடீரென அந்த இளைஞர் தனது காதலை ஏற்காத நீ… உயிருடன் இருக்க கூடாது எனக் கூறி கோடாரியால் ஆவேசமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுமி நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுமியை தரதரவென மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமியின் கழுத்தில் கயிறை கட்டி மாடி மேற்கூரையில் இருந்து தொங்க விட்டுள்ளார்.
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த சிறுமியின் உயிர் அந்தரத்தில் ஊசலாடியுள்ளது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவைரை விட்டுவிடும்படி கூச்சல் போட்டு கெஞ்சியுள்ளனர். திடீரென இளைஞரின் கையில் இருந்த கயிறின் பிடி நழுவியதால் சிறுமி கீழே விழுந்தார். உடனே அங்கிருந்து இளைஞர் தப்பியோடியதும் அருகில் இருந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கோடாரியால் 20 முறை தாக்கியதில் சிறுமியின் தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் படுகாயமடைந்ததால் 60 தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், அவரின் குடும்பத்தினருக்கும் இதில் தொடர்புடையதாக கூறி சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து இளைஞரின் குடும்பத்தினர் 5 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.
காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை 20 முறை கோடாரியால் தாக்கி, கழுத்தில் கயிறை கட்டி மாடியில் இருந்து தொங்கவிட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Jun 06, 2026 10:32 PM IST


