கோலாலம்பூர் | மார்ச் 3:
கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி, 17 வயதுச் சிறுவன் ஒருவன் கொடூரமான பாதுகாப்புச் சட்டத்தின் (SOSMA) கீழ் கைது செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் மலேசிய மனித உரிமை களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ள புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் டத்தோ எம். குமார், அத்தகைய கைது நடவடிக்கை எதனையும் தங்களது பிரிவு மேற்கொள்ளவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை அமைப்பான ‘சுவாராம்’ (Suaram) அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், 17 வயதுச் சிறுவன் ஒருவன் சோஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தது. சிறார்களை இத்தகைய கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்வது மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், காவல்துறை இந்தப் விளக்கத்தை அளித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) தரவுப் பதிவுகளில் பிப்ரவரி 15-ல் அவ்வாறான கைது நடவடிக்கைகள் எதுவும் பதிவாகவில்லை என்று, டத்தோ எம். குமார் கூறினார்.
காவல்துறை என்பது பல பிரிவுகளைக் கொண்டது. சோஸ்மா சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொள்ள பிற பிரிவுகளுக்கும் அதிகாரம் இருப்பதால், இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பிறகே முழுமையான விபரங்களை உறுதிப்படுத்த முடியும்.
தற்போது இந்த விவகாரம் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “சிறார்கள் மீது சோஸ்மா போன்ற கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்” எனக் கவலை தெரிவித்துள்ள அவர்கள், இந்தச் சிறுவன் எங்கே? எதற்காகக் கைது செய்யப்பட்டார்? என்பது குறித்து அரசுத் தரப்பு வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
The post 17 வயதுச் சிறுவன் சோஸ்மாவில் கைதா? “எங்களிடம் பதிவே இல்லை!” – அதிரடி மறுப்புத் தெரிவித்தார் டத்தோ எம். குமார்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

