
15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் துருக்கி அரசு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைத் தொடர்ந்து, இத்தீர்மானம் சனிக்கிழமை (ஒக்டோபர் 10) அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ், சிறுவர்களைப் பாதுகாக்கும் வகையில், வயது உறுதிப்படுத்தல் நடைமுறைகள் உட்படத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சமூக வலைத்தள நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.
சிறுவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, “வயது உறுதிப்படுத்தல் உள்ளிட்ட தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைச்” சமூக வலைத்தளத் தளங்கள் எடுக்க வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது. மேலும், “சிறுவர்களிடம் அடிமையாக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சேவையையும் வழங்கக் கூடாது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையவழி ஆபத்துமிக்க உள்ளடக்கங்கள் மற்றும் தளங்களின் அம்சங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகச் சர்வதேச அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே துருக்கியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே அவுஸ்திரேலியா சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி வருகின்றன.
சிறுவர்களிடையே காணப்படும் திரைப் பழக்கம் (Screen addiction), தூக்கமின்மை, இணையவழி அச்சுறுத்தல்கள் (Online bullying) மற்றும் உணவு முறை சார்ந்த கோளாறுகள் (Eating disorders) குறித்தான கவலைகளை சுட்டிக்காட்டியே அரசாங்கங்கள் இத்தகைய தடைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேவேளை, துருக்கியில் கருத்துச் சுதந்திரம், குறிப்பாக LGBTQ சமூகம், ஊடகங்கள் மற்றும் அரசியல் எதிர்க்கட்சிகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்துக் மனித உரிமைகள் அமைப்புகள் கவலை வெளியிட்டு வரும் பின்னணியிலேயே புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

