சென்னை:
தனது கவர்ச்சியான நடிப்பால் 90களில் ரசிகர்களை கவர்ந்த நடிகை மோகினி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்கவிருக்கிறார்.
1991ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான மோகினி, பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக மலையாளத் திரைப்படங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற அவர், “கேரளம் எனக்கு சொந்த ஊர் போல உணர்கிறேன்” என பேட்டிகளில் கூறியிருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பை விட்டு விலகிய மோகினி, கணவரின் ஊக்கத்தால் 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘கலெக்டர்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் தற்காலிகமாக மீண்டும் தோன்றினார். அதன்பின் அவர் திரையில் காணப்படவில்லை.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை இயக்குநர் ஜினு ஆபிரகாம் இயக்க, பிரித்விராஜ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மோகினியின் மீண்டுவரவு குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் உற்சாகத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.




