Last Updated:
மத்திய பிரதேசத்தில் கார்பைட் துப்பாக்கி தீபாவளி கொண்டாட்டத்தில் 14 குழந்தைகள் கண் பார்வை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கார்பைட் துப்பாக்கியைப் பயன்படுத்திய குழந்தைகள் 14 பேருக்குக் கண் பார்வை பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்ஸ்டாகிராம், யூடியூப் ரீல்ஸ்களில் சமீப காலமாக கார்பைட் துப்பாக்கி தொடர்பான ரீல்ஸ்கள் அதிக கவனம் பெற்று வந்தன. இதனைப் பார்த்து மத்திய பிரதேச மாநிலத்தில் பல குழந்தைகள் தீபாவளி பண்டிகைக்கு அந்தத் துப்பாக்கியை ஆர்வமாக வாங்கி உள்ளனர்.
இதனைப் பயன்படுத்தியதால் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டதாக சுமார் 120 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14 குழந்தைகளுக்குக் கண் பார்வை முற்றிலும் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக விதிஷா மாவட்டம் கார்பைட் துப்பாக்கியால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 18ஆம் தேதியே இந்தத் துப்பாக்கியை விற்பனை செய்ய அந்த மாநில அரசு தடை விதித்த நிலையில், விதிஷா மாவட்டத்தில் சட்டவிரோதமாகத் தயாரித்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
150 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இந்தத் துப்பாக்கி, வெடி குண்டு போல வெடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து வெளியே வரும் உலோகத் துகள்கள் மற்றும் கார்பைட் ஆவி விழித்திரையில் எரியும் தன்மையை உண்டாக்கும் என்றும் கருவிழி கிழியும் ஆபத்தும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனாலேயே கண் பார்வை நிரந்தரமாகப் பறிபோவதாக அவர்கள் விளக்கம் தந்தனர்.
October 23, 2025 7:53 PM IST


