Last Updated:
தமிழ்நாடு 2024-2025 நிதியாண்டில் 11.19% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க வளர்ச்சி.
நாட்டில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழ்நாடு கடந்த நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
2024-2025ம் நிதியாண்டில் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய புள்ளியியல் துறை திருத்தப்பட்ட தரவுகளை வெளியிட்டுள்ளது. 2011-12ம் நிதியாண்டை அடிப்படை ஆண்டாக வைத்து, பணவீக்கத்தின் பாதிப்பை கணக்கிட்ட பிறகு இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக பதிவாகி உள்ளது. இது தமிழ்நாடு பட்ஜெட்டின் போது கணிக்கப்பட்ட 9 சதவீதத்தைவிட 2.2 சதவீதம் அதிகமாகும். 2010-2011ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின பொருளாதார வளர்ச்சி 13.12 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாட்டின் பொருளாதாரம் கண்டுள்ளது.
2020-21ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின பொருளாதார வளர்ச்சி வெறும் 0.07 சதவீதமாகவே இருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து முன்னேறி வந்த மாநில பொருளாதாரம் 2023-24ம் நிதியாண்டில் 9.26 சதவீத வளர்ச்சியை பெற்றது. தற்போது 11. 19 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த முறை இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியும் திமுக ஆட்சிக் காலத்திலேயே எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் தமிழ்நாடு முறியடித்துள்ளது. 4 ஆண்டுகளை கணக்கில் கொண்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் சராசரி 8.2 சவீதமாகவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் சராசரி 8.63 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.
தேசிய அளவில் கடந்த நிதியாண்டில் உத்தரபிரதேசம் 8.99 சதவீதம், ஆந்திர 8.21 சதவீதம், தெலங்கானா 8.08 சதவீதம், கர்நாடகா 7.37 சதவீதம், மகாராஷ்டிரா 7.27 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளன. நாட்டின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 3து இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில், தெலங்கானாவின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 கோடி ரூபாயாகவும், கர்நாடகாவின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி 3 லட்சத்து 80 ஆயிரத்து 906 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் என்எஸ்டிபி 3 கோடியே 61 லட்சத்து 619 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கடந்த நிதியாண்டில், மாநில மொத்த உற்பத்தி அடிப்படையிலான தனி நபர் நிகர வருமானம் 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ரூபாயாகவும், கர்நாடகாவில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 906 கோடி ரூபாயாகவும் இருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அது 3 லட்சத்து 61 ஆயிரத்து 619 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய விகிதத்தின் படி தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை தமிழ்நாடு 2031-2032ம் ஆண்டிலேயே அடைந்துவிடும் என பொருாளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
14 ஆண்டுகால தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி(%)
- 2010-11 – 13.12
- 2011-12 – 7.4
- 2012-13 – 5.37
- 2013-14 – 7.6
- 2014-15 – 4.92
- 2015-16 – 8.24
- 2016-17 – 7.15
- 2017-18 – 8.59
- 2018-19 – 7.01
- 2019-20 – 3.25
- 2020-21 – 0.07
- 2021-22 – 7.89
- 2022-23 – 6.17
- 2023-24 – 9.26
- 2025-25 – 11.19
இந்திய பொருளாதார வளர்ச்சியை மிஞ்சிய தமிழ்நாடு(%)
- 2021-22 7.89 9.7%
- 2022-23 6.17 7.6%
- 2023-24 9.26 9.20%
- 2024-25 11.19 6%
- 4 ஆண்டு சராசரி 8.63 8.2%
மாநில பொருளாதார வளர்ச்சி(%)
- தமிழ்நாடு 11.19%
- உத்தர பிரதேசம் 8.99%
- ஆந்திரா 8.21%
- தெலங்கானா 8.08%
- கர்நாடகா 7.37%
- மகராஷ்டிரா 7.27%
மாநில GDP அளவில் தனிநபர் வருவாய்
- தெலங்கானா ரூ.3.88 லட்சம்
- கர்நாடகா ரூ.3.81 லட்சம்
- தமிழ்நாடு ரூ.3.62 லட்சம்
August 06, 2025 3:35 PM IST
14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி.. சாத்தியமானது எப்படி? – ஓர் அலசல்!


