Last Updated:
இந்திய ராணுவ உபகரணங்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ (Mann Ki Baat) திட்டத்தின் 136-வது அத்தியாயத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தகவல்களை பகிர்ந்து வருகிறார். ஆகாஷவாணி ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த உரையில், கார்கில் வெற்றி தினம், நாட்டின் பாதுகாப்புத் துறையில் எட்டப்பட்டுள்ள ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) சாதனைகள், நீர் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரப் பெருமைகள் எனப் பல முக்கிய விஷயங்களைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தனது உரையின் தொடக்கத்தில், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு தாயகத்தைக் காக்கத் தன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்குப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ஜூலை 26 ஆம் தேதி இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான நாள் என்றும், இது இந்திய ராணுவ வீரர்களின் இணையற்ற தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் அடையாளம் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
பிரதமர் மோடி பேசியதாவது-
நமது வாழ்க்கையில் சில தேதிகள் உள்ளன, அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஜூலை 26 அப்படிப்பட்ட ஒரு நாள். இன்று நாடு முழுவதும் கார்கில் வெற்றி தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த நாள் நமது வீரர்களின் இணையற்ற தைரியம், வீரம், தியாகம் மற்றும் தாய்நாட்டின் மீதான அர்ப்பணிப்பின் குறியீடாகும்.
முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ‘INS மகேந்திரகிரி’ போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ‘ஆத்மநிர்பார் பாரத்’ இயக்கத்தின் வளர்ந்து வரும் வலிமையின் சின்னமாகும்.
இந்த மாதத்தில் DRDO அமைப்பு ‘பினாகா லாங் ரேஞ்ச் கைடட் ராக்கெட்’ மற்றும் ‘குஷா ஏவுகணை’ ஆகியவற்றை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தச் சாதனைகள் அனைத்தும் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு உழைப்பிற்குச் சான்றாகும்.
இன்று பாதுகாப்பு உற்பத்தி, பாதுகாப்பு ஏற்றுமதி மற்றும் நட்பு நாடுகளுடனான கூட்டு ஒப்பந்தங்களில் இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் எனது இந்தோனேசிய பயணத்தின் போது, பிரம்மோஸ் மற்றும் அஸ்த்ரா ஏவுகணைகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்திய ராணுவ உபகரணங்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மீது உலக நாடுகளுக்கு இருக்கும் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நீர் பாதுகாப்பு என்பது மக்கள் பங்கேற்பின் மிகப்பெரிய இயக்கமாகும். ஜூலை 4 முதல் நாடு முழுவதும் ஒரு சிறப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் உங்கள் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு குளம், கிணறு அல்லது நீர்நிலையைப் பராமரிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு, தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்க உறுதி எடுத்துக்கொள்ளள வேண்டும். இன்று நாம் சேமிக்கும் தண்ணீர், வரும் சந்ததியினரின் மிகப்பெரிய மூலதனமாக அமையும்.
ஜூலை 27 அன்று பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் வருகிறது. ஒரு ஆசிரியரின் பணிதான் அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அவர் எப்போதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பெரிய கனவுகளைக் காணவும், அவற்றை நனவாக்கவும் தூண்டினார்.
இன்னும் சில வாரங்களில் நாம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். நமது மூவர்ணக் கொடி வெறும் தேசியக் கொடி மட்டுமல்ல, நமது அரசியலமைப்பின் லட்சியங்கள் மற்றும் நாட்டின் ஒற்றுமையின் குறியீடாகும். என்று பிரதமர் மோடி பேசினார்.
136-வது ‘மன் கி பாத்’: கார்கில் தியாகிகளுக்கு பிரதமர் மோடி வீரவணக்கம்! சுயசார்பு இந்தியா குறித்தும் பேச்சு


