Last Updated:
உள்ளூர் மேட்ச்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயன் ராஜ் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி சதம் அடித்த 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
இவரை இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நட்சத்திரம் என்று ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிக்கிறார்கள். மிகவும் குறைந்த வயதில் உலகத் தரமான சாதனையை வைபவ் சூர்யவன்ஷி ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் அவரை விடவும் வயது குறைவான 13 வயது நிரம்பிய அயன் ராஜ் என்பவர் ஏற்படுத்தியுள்ள சாதனை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பிஹார் மாநிலம் முசாபர்பூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.
30 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்த மேட்ச் நடைபெற்றது. இந்த போட்டியில் சமஸ்கிருத கிரிக்கெட் அகாடமி அணிக்காக அயன் ராஜ் என்ற 13 வயது சிறுவன் களமிறங்கினார். 134 பந்துகளை எதிர்கொண்ட அவர் 22 சிக்ஸர், 41 பவுண்டரியுடன் 327 ரன்கள் குவித்தார். தற்போது இந்த சாதனை சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
பவுண்டரி மற்றும் சிக்ஸரில் மட்டுமே அயன் ராஜ் 296 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 200-க்கும் அதிகம். இந்த அதிரடியான பேட்டிங் எதிரணியை மிரண்டுபோகச் செய்துள்ளது.
அயன் ராஜுக்கு வைபவ் சூர்யவன்ஷிதான் ரோல் மாடலாக இருந்துள்ளார். இருவரும் நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பழகி வந்துள்ளனர். வைபவ் சூர்யவன்ஷியின் ஆளுமை தன்னைக் கவர்ந்ததாகவும், அவரைப் பின்பற்றி தானும் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்காக தான் விளையாடுவேன் என்றும் அயன் ராஜ் நம்பிக்கை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பயிற்சியின்போது ஒரு நாள் கூட தவறவிடாமல் அகாடமியில் கிரிக்கெட் வகுப்புகளைக் கவனித்துள்ளார். தனது வீட்டிலும் பயிற்சி அமைப்புகளை அயன் ராஜின் தந்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இரவு பகலாக பேட்டிங் பயிற்சி செய்து வரும் அயன் ராஜுக்கு படிப்பை விடவும் கிரிக்கெட்டில் தான் பேரார்வம் இருக்கிறது.
உள்ளூர் மேட்ச்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயன் ராஜ் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
June 16, 2025 9:07 PM IST


