பெட்டாலிங் ஜெயா,
13வது மலேசிய திட்டம் (13MP) தொடர்பான திருத்தப்பட்ட ஆவணத்தில், பெரும்பாலான முக்கிய கொள்கை சீர்திருத்தங்கள் இடம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ராம்லி தெரிவித்துள்ளார்.
“நான் படித்த நிர்வாக சுருக்கத்தின் அடிப்படையில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், நான் ராஜினாமா செய்யும் வரை உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ செயல்திட்டங்களில் 95% விடயங்கள் தற்போது 13வது மலேசிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளன,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
அதிலுள்ள முக்கிய சீர்திருத்தங்களில் கல்விமுறை, பொருளாதார கட்டமைப்பின் மேம்பாடு, பழைய தேசிய கொள்கைகளில் மாற்றம், மற்றும் மூன்றாம் பிரிவின் வளர்ச்சி ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன.
மேலும், தேசிய எரிசக்தி மாற்ற வழிமுறை வரைபடம், கேஎல்20 திட்டம், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம், “மலேசியா தயாரித்தது” (Made by Malaysia) போன்ற முயற்சிகள், மற்றும் சிறப்பு சுற்றுலா முதலீட்டு மண்டலங்கள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், அரசு சேவை திறனை உறுதி செய்யும் மசோதா 2025 மற்றும் ‘அலி பாபா’ நடைமுறையை தடுக்கும் சட்ட முன்மொழிவுகள் போன்ற முன்னோடி முயற்சிகளும் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன என்று ரபிசி கூறினார்.
“அடுத்த வாரம், இந்தத் திட்டம் தொடர்பாக நான் ஒவ்வொன்றாக கருத்து தெரிவிப்பேன்,” என்று பாண்டான் உறுப்பினர் ரபிசி கூறியதுடன், நாடாளுமன்றத்தில் இது குறித்து அடுத்த திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதென்றும் கூறினார்.
இந்த திட்டத்தை அரசியல் தலையீடுகளிலிருந்து பாதுகாத்த பொருளாதார அமைச்சகத்தின் தலைமையை ரபிசி பாராட்டினார். “இறுதியாக, வதந்திகள் வெறும் அரசியல் பிரசாரம்தான்,” என்றார் அவர்.
மே மாத இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஜீசன், பொருளாதார அமைச்சகத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். 13வது மலேசிய திட்டத்திற்கான மாற்றங்களைச் செயற்படுத்தும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரபிசி முன்பே, ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தின் கடைசி நேர மாற்றங்கள் முழு திட்டத்தின் நோக்கத்தையும் பாதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை வெளியிட்டிருந்தார்.




