Last Updated:
வலுவான இந்திய அணி மிக குறைந்த ஸ்கோரைக் கூட எட்ட முடியாமல் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 93 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன் அணியான தென்னாப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் தொடர்ந்த இந்திய அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 136 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்தார். துருவ் ஜுரெல் 13 ரன்களும், அக்சர் படேல் 26 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 93 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
November 16, 2025 3:23 PM IST


