உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
அனுபவம் மிக்க நெதர்லாந்து அணியிடம் உலகின் வலிமையான கிரிக்கெட் அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகளை பறிகொடுத்து இருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் மோதி வருகின்றன.
இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்று குரூப் டி பிரிவில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க்கின் நாசோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் வலிமையான பந்துவீச்சுக்கு முன்னால் நெதர்லாந்து அணியால் தாக்குபிடிக்க முடியவில்லை. நெதர்லாந்து அணியின் சைப்ரான்ட் எஞ்செல்பெக்ட் 40 ரன்களும், வான் பீக் 23 ரன்களும் எடுத்தனர் மற்றவர்கள் சொற்ப இலக்கத்தில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணியினர் தற்போது விளையாடி வருகின்றனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக முதல் பந்திலேயே அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்கள் எடுத்த போது வான் பீக் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க – சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி… தோனியின் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா…
அடுத்த ஓவரில் கேப்டன் எய்டன் மார்க்கம், கிங்மா பவுலிங்கில் எட்வர்ட்ஸிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். 5-ஆவது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹெய்ன்ரிக் கிளாசன் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
4.3 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. உலகக்கோப்பை தொடர் முழுவதும் அனுபவம் இல்லாத அணிகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில் வலிமையான தென்னாப்பிரிக்காவை கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து வீழ்த்துமா என்ற விவாதம் வலைதளங்களில் எழுந்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
