Last Updated:
ஆர்.சி.பி. அணியின் மதிப்பு 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அந்த அணியை விற்க அதன் உரிமையாளர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ என்ற மதுபான நிறுவனம் வைத்துள்ளது. அந்த அணியின் மதிப்பு 17 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படும் நிலையில், அணியை முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ விற்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு, ஒரு சிறுவர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஆர்.சி.பி. அணி நிர்வாகம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், அதன் பின்னர் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆர்.சி.பி. ரசிகர்களையும் அணி நிர்வாகத்தையும் சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில், ஆர்.சி.பி. அணியின் உரிமையாளர் அதனை விற்பனை செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த அணியை பிரிட்டனைச் சேர்ந்த மதுபான நிறுவனமான டியாஜியோ சொந்தமாக வைத்திருக்கிறது.
தற்போது, ஆர்.சி.பி. அணியின் மதிப்பு 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆர்.சி.பி. அணி சர்ச்சையில் சிக்கி இருப்பதால், அதனை முழுமையாக அல்லது பகுதி பங்குகளை விற்பனை செய்ய உரிமையாளர்கள் தரப்பு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
June 10, 2025 9:15 PM IST


