Last Updated:
Ethiopia volcano | குஜராத்தின் வடமேற்கு பகுதியில் இருந்து ராஜஸ்தான், ஹரியானா வழியாக டெல்லி வான் பரப்பு வரை ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் சாம்பல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளன.
எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்கு பகுதிகளுக்கு பரவியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த ’ஹேலி குப்பி’ என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியது. இதனால் வானில் சாம்பல் மூட்டமாக காட்சி அளித்தது.
இந்த சாம்பல் மேகக் கூட்டங்கள் வளிமண்டலத்தில் பரவி செங்கடல், ஏமன், ஓமன் வழியாக நேற்றிரவு இந்திய வான் பரப்பை அடைந்தது. குஜராத்தின் வடமேற்கு பகுதியில் இருந்து ராஜஸ்தான், ஹரியானா வழியாக டெல்லி வான் பரப்பு வரை ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் சாம்பல் மேகக் கூட்டங்கள் சூழ்ந்துள்ளன.
ஏற்கனவே காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு வரும் தலைநகர் டெல்லியில், இந்த எரிமலை சாம்பல் மேகக் கூட்டத்தால் காற்றின் தர அளவு மேலும் மோசடைந்தது. சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்பர் டை ஆக்சைடு, கண்ணாடி மற்றும் பாறை துகள்கள் பரவியிருக்கும் நிலையில், டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கும் 11 விமானங்களை ரத்து செய்துள்ளது. ஜெட்டா, குவைத், அபுதாபிக்கு சென்று வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆகாஷா நிறுவனம் அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் சாம்பல் மேகக் கூட்டங்கள் பரவியதால் சென்னையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து மும்பைக்கு காலை 7.15 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்-இந்தியா விமானம் சுமார் மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 10.54 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 9.35 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.
Delhi,Delhi,Delhi
November 25, 2025 1:02 PM IST


