ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 100 மில்லியன் ரூபா கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரூபா கையூட்டல் (இலஞ்சம்) விவகாரம் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் 2:09 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான கொடுக்கல் வாங்கலில் கையூட்டலாகப் பெறப்பட்ட நிதி குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் (Standard Chartered Bank) ‘BIZ Solutions INC’ என்ற பெயரில் பேணப்பட்ட கணக்கொன்றிற்கு 1,454,651.24 யூரோ கையூட்டலாகப் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதில் 800,000 அமெரிக்க டொலர், இலங்கை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ‘Sabre Vision Holdings LTD’ நிறுவனத்தின் சிங்கப்பூர் ஓ.சி.பி.சி. வங்கிக் (OCBC Bank) கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு மாற்றப்பட்ட நிதிக்கு நிகரான தொகையாக, குறித்த இலங்கை வர்த்தகரிடமிருந்து 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷ மொத்தமாக 100 மில்லியன் ரூபாவைத் தனது பொறுப்பில் பெற்றுக்கொண்டதாக ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த இலங்கை வர்த்தகர் வழங்கிய வாக்குமூலம், பிரான்ஸை தளமாகக் கொண்ட எயார்பஸ் (Airbus) நிறுவன அதிகாரிகளால் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள், அத்துடன் விசாரணைகளின் போது திரட்டப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

