இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேசத்தந்தையை மத்திய அரசு இழிவுபடுத்துவதாக கூறினார். ஏழைகளின் உரிமையைப் பறிக்கும் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
புதிய மசோதாவால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என மேற்குவங்கம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், ஏழை மக்களின் உரிமைகளையும் பிரதமர் மோடி அடியோடு வெறுப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது தன்னிறைவு கிராமம் என்ற மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வையின் உருவமாக உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லட்சக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டமாக இருந்ததாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டத்தை பலவீனமடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மத்திய அரசு, தற்போது முழுமையாக அழிக்க முடிவு செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதன் மூலம் அத்திட்டத்திற்கான நிதி உள்ளிட்டவற்றில் சர்வாதிகாரம் செய்ய மத்திய அரசு விரும்புவதாகவும், அறுவடை காலங்களில் திட்டத்திற்கான நிதி தீர்ந்து விட்டால் லட்சக்கணக்கான பயனர்கள் வேலையிழக்கக் கூடும் எனவும் ராகுல் காந்தி எச்சரித்து உள்ளார்.
மேலும், புதிய மசோதா மகாத்மா காந்தியை நேரடியாக அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும், ஏற்கனவே வேலையின்மை மூலம் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிய பா.ஜ.க. அரசு, தற்போது கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அதேசமயம், ராம ராஜ்ஜியத்தை நிறுவவே VP-G RAM G மசோதா தயாராகியுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மசோதா குறித்து உரையாற்ற அவர் எழுந்த போது, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அமளிக்கு இடையே பேசிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், காந்தியை தாங்கள் மறக்கவில்லை என கூறினார். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதுடன், மகாத்மா காந்தி படத்துடன் சபாநாயகர் இருக்கையை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முற்றுகையிட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலமாகச் சென்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில எம்.பி.க்கள் மகாத்மா காந்தி படத்துடன் நாடாளுமன்ற கட்டடத்தின் மீது நின்று போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், புதிய மசோதா குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நாளை விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
December 16, 2025 10:16 PM IST
100 நாள் வேலை திட்டம் மாற்றம்; “ராம ராஜ்ஜியத்தை நிறுவவே..” – மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்

