Last Updated:
மத்திய அரசு Mahatma Gandhi தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துகிறது.
100 நாள் வேலைத் திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ஆம் ஆண்டு இயற்றியது. இந்த திட்டத்தின் கீழ், நீர் பாதுகாப்பு, நில மேம்பாடு, கிராமப்புற சாலைப் பணிகள், கால்நடை நீர் திட்டங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கான மசோதா இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பெயர் மாற்றத்துடன், இத்திட்டத்தில் சில முக்கிய சீர்திருத்தங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
அதில், வேலைத் திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, 90 சதவிகிதம் நிதியை மத்திய அரசு வழங்கி வரும் சூழலில், 60 சதவிகிதமக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நிதி பங்களிப்பு 10 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்வதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வறுமை அளவை காரணியாக வைக்கும்போது, தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீடு மேலும் குறையும் அபாயம் உள்ளது. விவசாய அறுவடை காலத்தில் 60 நாட்களுக்கு ஊரக வேலைத் திட்டத்தில் பணிகளை ஒதுக்கக் கூடாது, மத்திய அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டே மாநில அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும், வாராந்திர அடிப்படையில் ஊதியம் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளன.
ஏற்கனவே வேலை நாட்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன் அமலுக்கு வர உள்ளது.
December 15, 2025 1:51 PM IST


