Last Updated:
கடந்த 1979 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு கழகம் ஒரு சிறிய விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவரை ஆறு விதமான ஏவு ஊர்திகளை ஆய்வு செய்துள்ள இஸ்ரோ நாளை நூறாவது விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாளை 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த இருக்கும் நிலையில், அதன் பயணம் வெற்றி அடைய இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஒவ்வொரு முறையும் புதிய விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோவிலிலும், சூலூர் பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலிலும் சாமி கும்பிட்டு விண்கலத்தின் பயணம் வெற்றி அடைய வேண்டிக் கொள்வது வழக்கம். அதனைப் பின்பற்றி இஸ்ரோ தலைவராக புதிதாகப் பொறுப்பிற்கு வந்துள்ள நாராயணன், நாளை 100வது விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவ இருக்கும் நிலையில் இன்று திருப்பதி வந்து ஏழுமலையானை வழிபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், “கடந்த 1979 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு கழகம் ஒரு சிறிய விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவரை ஆறு விதமான ஏவு ஊர்திகளை ஆய்வு செய்துள்ள இஸ்ரோ நாளை நூறாவது விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது. நாளை விண்ணில் செலுத்தப்பட இருக்கும் இரண்டாவது தலைமுறை ‘நேவிகேஷன் சேட்டிலைட்’ என்று கூறப்படும் இந்த ‘சேட்டிலைட்’ பொதுமக்களுக்கு பல்வேறு வகையான பயன்பாடுகளை கொடுக்கும். நம்முடைய நாடு 7500 கி.மீ நீள கடற்கரையைக் கொண்டது. இந்திய மீனவர்கள் பயன்படும் வகையில் மீன்வளம் எங்கு இருக்கிறது என்பது பற்றிய தகவல்களை இஸ்ரோ அவர்களுக்கு தெரிவிக்கிறது.
இதன் மூலம் நமக்கு சுமார் 34,000 கோடி ரூபாய் உபரி வருமானம் கிடைக்கிறது. மேலும், மீனவர்கள் எல்லை தாண்டி சென்று விடாமல் தடுக்க மொபைல் செயலி ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் இந்திய கடல் எல்லை பற்றி அவ்வப்போது மீனவர்களுக்கு தகவல்களை அளித்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரோ இதுவரை நாட்டு மக்களுக்கு தேவையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளது. இப்போதுதான் இஸ்ரோ வணிக ரீதியான செயல்பாடுகளில் அடி எடுத்து வைத்துள்ளது.
Also Read | சதமடிக்கும் இஸ்ரோ.. 100-வது ராக்கெட் செலுத்த உள்ள செயற்கைக்கோள்.. இத்தனை அம்சங்களா?
சர்வதேச அளவில் இஸ்ரோவின் வணிக ரீதியான செயல்பாடு இரண்டு சதவீதமாக மட்டுமே உள்ளது. அதனை 8% ஆக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடியின் ஆலோசனை பேரில் மேற்கொண்டு வருகிறோம். குலசேகரப்பட்டினத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் இரண்டாவது ஏவுதளம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வரும். அங்கிருந்து சிறிய விண்கலங்கள், தனியார்களின் விண்கலங்கள் ஆகியவை விண்ணில் ஏவப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளத்தை கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்தால் இங்கிருந்து சுமார் 30,000 கிலோ வரை எடையுள்ள அடுத்த தலைமுறை விண்கலங்களை விண்ணில் செலுத்த முடியும்” என்று அப்போது கூறினார்.
Tirupati,Chittoor,Andhra Pradesh
January 28, 2025 12:30 PM IST
100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ.. வெற்றிக்காக திருப்பதியில் தரிசனம் செய்த நாராயணன்!


