கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள 10 முக்கிய நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டு டோல் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதற்காக, அரசாங்கம் சுமார் 500 மில்லியன் ரிங்கிட் நிதிச் சுமையை ஏற்றுள்ளதாகப் பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட முடிவின்படி, 10 நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கு இழப்பீடாக இந்த 500 மில்லியன் ரிங்கிட் தொகையை அரசாங்கம் வழங்கும்.
அதேநேரம் ஹரிராயா, சீனப் புத்தாண்டு, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது வழங்கப்படும் 50% டோல் தள்ளுபடிக்காக, அரசாங்கம் ஆண்டுக்கு 80 மில்லியன் ரிங்கிட் செலவிடுகிறது என்றும், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்று என அவர் மேலும் கூறினார்.
நெடுஞ்சாலைகள் தனியார் மயம் (Privatisation) மூலம் கட்டப்படுவதால், நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த டோல் வசூல் அவசியமாகிறது. ஒப்பந்தப்படி கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு இருந்தபோதிலும், மக்களின் நலன் கருதி அந்த உயர்வை ரத்து செய்து, அந்தப் பணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.
- கட்டண உயர்வு இல்லாத 10 முக்கிய நெடுஞ்சாலைகள் பட்டியலில் பின்வரும் சாலைகள் இடம்பிடித்துள்ளன;
MEX (கோலாலம்பூர் – புத்ராஜெயா விரைவுச்சாலை) - DUKE (டூத்தா – உலு கிள்ளான் விரைவுச்சாலை)
- GRANDSAGA (செராஸ் – காஜாங் நெடுஞ்சாலை)
- LATAR (கோலாலம்பூர் – கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை)
- SDE (செனாய் – தேசாரு விரைவுச்சாலை)
- LPT2 (கிழக்குக்கரை விரைவுச்சாலை பகுதி 2)
- SKVE (தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை)
- LLB (பட்டர்வொர்த் வெளிவட்டச் சாலை)
- NNKSB (புதிய வடக்கு கிள்ளான் நீர்ச்சந்தி புறவழிச்சாலை)
- சுல்தான் அப்துல் ஹலீம் முவாட்சம் ஷா பாலம் (பினாங்கு 2-வது பாலம்)




