International
oi-Vigneshkumar
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 28 பேர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். யாத்திரை செல்லும்போது சரியான நேரத்தில் விட்ட ஒரு டீ பிரேக்கும், அதனால் ஏற்பட்ட 10 நிமிட தாமதமும் தங்களது உயிரை காப்பாற்றியதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் பல நூறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பலரும் இதில் சிக்கியுள்ளனர். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பலரும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக சென்றிருந்தபோது இந்த வெள்ளம் ஏற்பட்டது.

28 இந்தியர்கள்
அப்படி தான் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த 28 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்தனர். வெள்ளம் ஏற்பட்ட இடத்தில் தான் அவர்களும் சிக்கினர். இருப்பினும், நல்வாய்ப்பாக அவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை. பத்திரமாக மீட்கப்பட்ட அவர்கள், நேற்று சனிக்கிழமை பத்திரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
10 நிமிட டீ பிரேக்
திருப்பதியை சேர்ந்த சைன் இன் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெம்மசானி வெங்கடரமணாவும் இந்த குழுவில் இருந்தார். சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் நேபாள திபெத் எல்லையில் உள்ள சியாப்ருபேசியை அதிகாலையிலேயே சென்றடைய வேண்டியிருந்தது. ஆனால் வழியில் டீ குடிக்க நின்றோம். அந்த 10 நிமிட தாமதம் தான் எங்கள் 28 பேரின் உயிரையும் காப்பாற்றியது. பேரழிவு ஏற்பட்டதும் எங்கள் ஓட்டுநர் உடனடியாக செயல்பட்டு, மாற்றுப்பாதையில் எங்களை பாதுகாப்பான இடத்துக்கு அனைத்து சென்றார்” என்றார்.
இதேபோல் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கிருஷ்ணையா முத்தியாலாவும் தங்களது பயணத்தில் ஏற்பட்ட தாமதம் எப்படி உயிரைக் காப்பாற்றியது என்பதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “எங்கள் குழுவில் ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 28 பக்தர்கள் இருந்தனர். மானசரோவர் செல்ல திட்டமிட்டிருந்தோம். எங்களது பயணம் மட்டும் தாமதமாகவில்லை என்றால் வெள்ளம் அடித்துச் சென்ற சியாப்ருபேசி பாலத்தில் நாங்கள் இருந்திருப்போம். எங்கள் அனைவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என்று அவர் கூறினார்.
உயிரிழப்புகள்
இதற்கிடையே நேபாள- திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 1500 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. மாயமானோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
என்ன காரணம்
இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக இந்த பேரழிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிக உயரத்தில் இருந்த பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்து விழுந்துள்ளது. அது ஒரு தற்காலிக ஏரி போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அந்த ஏரி போன்ற அமைப்பு உடைந்து அதில் இருந்து தண்ணீர், மண் கற்கள் மற்றும் சேறு கலந்த பெரும் வெள்ளத்தை உருவாக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இருப்பினும், இதை ஆய்வாளர்கள் உறுதி செய்யவில்லை. வெள்ளத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தில் நேபாளத்தின் பல வீடுகள் மற்றும் குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன. திரிசூலி ஆற்றை ஒட்டிய நுவாகோட் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்மின் திட்டங்கள் மற்றும் சோலார் மின் நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்தியா உதவி
இதற்கிடையே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்தியாவில் இருந்து 11 பேர் கொண்ட குழு காத்மாண்டுவை சென்றடைந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்தியா நான்காவது நிவாரண விமானத்தை காத்மாண்டுவுக்கு அனுப்பியது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் அந்த விமானம் சென்றடைந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



