Last Updated:
மகாராஷ்டிரா தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி 10 நிமிடம் தாமதமாக பள்ளிக்கு வந்ததால், ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனையைத் தொடர்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நலசோபரா அருகே தனியார் பள்ளி ஒன்றில் 100 முறை தோப்புக்கரணம் போட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு 12 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தின் வாசை எனுமிடத்தில் அனுமந்த் வித்யா மந்திர் என்ற உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6ஆம் வகுப்பு பயிலும் காஜல் கோன்ட் (Kajal Gond 12) என்ற மாணவி, கடந்த 14ஆம் தேதி பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாகச் சென்றதால், 100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி ஆசிரியர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
முதுகில் பள்ளிக்கூடப் புத்தகப் பையை சுமந்தபடியே 100 முறை தோப்புக்கரணம் போட்டதால் சிறுமிக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்ததும், உடல்நிலை இன்னும் மோசமடைந்ததால், நலசோபராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிறுமி காஜல் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். பள்ளி ஆசிரியரின் கடுமையான தண்டனையே உயிரிழப்புக்குக் காரணம் என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதியும்வரை பள்ளியை மீண்டும் திறக்கக் கூடாது என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
November 16, 2025 10:17 PM IST


