Last Updated:
இந்தியாவில் இருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி 2014-15-ல் ரூ.1500 கோடியாக இருந்த நிலையில், 2024-25-ல் ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 127 மடங்கு அதிகம் என்று கூறி உள்ளார்.
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 127 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலனளிப்பதாக தெரிகிறது. இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 127 மடங்கு அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த தகவலை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்தியாவில் இருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி 2014-15-ல் ரூ.1500 கோடியாக இருந்த நிலையில், 2024-25-ல் ரூ.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 127 மடங்கு அதிகம் என்று கூறி உள்ளார்.
மொபைல் போன் உற்பத்திக்காகவே தொடங்கப்பட்ட பிஎல்ஐ திட்டம் (production linked incentive) மொத்தம் ரூ.12,390 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். “LSEM-க்கான PLI திட்டம் ஏற்கனவே 12,390 கோடி ரூபாய் ஒட்டுமொத்த முதலீட்டை ஈர்த்துள்ளது. இது ரூ.8,44,752 கோடி ஒட்டுமொத்த உற்பத்திக்கும் ரூ.4,65,809 கோடி ஏற்றுமதிக்கும் வழிவகுத்தது மற்றும் ஜூன் 25 வரை 1,30,330 கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இவை நேரடி வேலைகள் ஆகும்” என்றும் கூறி இருக்கிறார்.
அதேபோல “2014-15 ஆம் ஆண்டில் 75% இருந்த நாட்டின் மொபைல் இறக்குமதி தேவை, 2024-25 ஆம் ஆண்டில் 0.02 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெரிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான பிஎல்ஐ திட்டம் இந்தியாவில் மொபைல் உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவை நிகர இறக்குமதி (net importer) நாடு என்ற நிலையில் இருந்து மொபைல் போன்களின் நிகர ஏற்றுமதி (net exporter of mobile phones) நாடு என்ற நிலைக்கு மாற்றியுள்ளது. இதன் காரணமாக இப்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
தகவல் தொழில்நுட்ப ஹார்ட்வேருக்கான PLI திட்டம் 2.0, இதுவரை மொத்தம் ரூ.717.13 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாகவும், இதன் விளைவாக ரூ.12,195.84 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் ஜூன் 2025 நிலவரப்படி 5,056 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசாதா குறிப்பிட்டு உள்ளார். 2020-21 நிதியாண்டிலிருந்து தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி துறையில் இந்தியா 4,071 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) பெற்றுள்ளது. இதில் சுமார் 2,802 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் PLI திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களிடமிருந்து வந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 30, 2025 7:56 AM IST