Last Updated:
ராஜஸ்தான் ஜோத்பூரில் கணவர் குடும்பத்தார் 10 ஆண்டுகளாக கொடுத்த வரதட்சணை கொடுமையால் பெண் தனது 3 வயது குழந்தையுடன் விபரீத முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில், கணவன் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால், தனது 3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பெண் சஞ்சு பிஷ்னோய். இவருக்கு திலீப் என்பவருடன் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் யஷஸ்வி என்ற குழந்தை இருந்தது.
சஞ்சு பிஷ்னோய் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். திருமணமாகி 10 வருடங்கள் கடந்த பின்னும், சஞ்சு பிஷ்னோயிடம் அவரது கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை விவகாரம் தொடர்பாக அடிக்கடி குத்திக் காண்பித்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சஞ்சு கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை சஞ்சுவின் கணவர் திலீப் அவரை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே கடும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் கேனில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.
2 பேர் மீதும் தீ பற்றி எரிய அவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு கணவர், மாமியார் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் மீது கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயைப் போராடி அணைத்த அவர்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் குழந்தை யஷஸ்வி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய் சஞ்சுவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், பரிதாபமாக உயிரிழந்தார்.
தங்களது மகள் உயிரிழப்பு குறித்து சந்தேகம் தெரிவித்துள்ள சஞ்சுவின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கணவர் திலீப், மாமியார் உள்ளிட்டோர் தங்களது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் குடும்பத்தாரின் தொடர் டார்ச்சரால் தனது 3 வயது மகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு, ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
August 27, 2025 10:27 PM IST
10 ஆண்டுகளாக கணவன் கொடுத்த டார்ச்சர்.. பெற்ற குழந்தையோடு அரசுப் பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!


