Last Updated:
பிகாரின் முதலமைச்சராக 10 ஆவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
பிகாரின் முதலமைச்சராக 10 ஆவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கும் நிகழ்விற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 14 ஆம் தேதி நடந்த நிலையில், பாஜக மற்றும் நிதிஷின் ஜக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்தது.
இதையடுத்து, வரும் 20 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், பிகாரின் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனத் தெரிகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்பட பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
November 18, 2025 3:30 PM IST
10வது முறையாக பிகார் முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார்.. பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு யாருக்கெல்லாம் அழைப்பு?


