Last Updated:
10ம் வகுப்பு பயிலும் அபிஷேக் சோலாசாகுடா என்ற மாணவர் 600 மதிப்பெண்களுக்கு வெறும் 200 மதிப்பெண்களை மட்டுமே எடுத்துள்ளார். 32 சதவீதம் மதிப்பெண்களுடன் இவர் 6 பாடங்களில் ஃபெயில் ஆகியுள்ளார்.
10ம் வகுப்பில் ஃபெயிலான மகனின் தோல்வியை கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடையாது. வறுத்தமளிக்கக்கூடிய ஒரு ரிசல்ட் தான். ஆனால் இதுவே அனைத்திற்குமான முடிவு அல்ல. இந்த விஷயத்தை நன்கு உணர்ந்த 10ம் வகுப்பு மாணவரின் பெற்றோர்கள் தங்களுடைய மகனின் தோல்வியை ஏற்றுக்கொண்டு விடாமுயற்சியோடு மீண்டும் மீண்டும் போராட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக தோல்வியை புதுவிதமான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள பாசவேஸ்வர் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் அபிஷேக் சோலாசாகுடா என்ற மாணவர் 600 மதிப்பெண்களுக்கு வெறும் 200 மதிப்பெண்களை மட்டுமே எடுத்துள்ளார். 32 சதவீதம் மதிப்பெண்களுடன் இவர் 6 பாடங்களில் ஃபெயில் ஆகியுள்ளார்.
எதிர்பார்த்தது போலவே இந்த மாணவருடைய நண்பர்கள் பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆனதற்காக இவரை கேலி கிண்டல் செய்துள்ளனர். எனினும் அபிஷேக்கின் பெற்றோர் அவருக்கு பக்க பலமாக இருந்து, யாரும் நம்ப முடியாத அளவிற்கு வித்தியாசமான ஒரு செயலில் ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய மகனை திட்டுவதற்கு பதிலாக அல்லது அவமானப்படுத்துவதற்கு பதிலாக அபிஷேக்கை ஊக்குவிப்பதற்காக ஒரு கேக் வாங்கி சிறிய ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“நீ பரிட்சையில் வேண்டுமானால் தோற்றுப் போய் இருக்கலாம். ஆனால் உன்னுடைய வாழ்க்கையில் அல்ல. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, வெற்றி பெறுவதற்கு உனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன”, என்று அபிஷேக்கின் பெற்றோர்கள் கூறினர். தன்னுடைய பெற்றோர்கள் தனக்கு இந்த அளவிற்கு ஆதரவு தருவார்கள் என்பதை அபிஷேக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. “நான் என்னுடைய பரீட்சையில் தோற்றுப் போய் இருந்தாலும், எனது குடும்பம் எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது நான் மீண்டும் என்னுடைய பரிச்சையை எழுதி, அதில் வெற்றி பெற்று வாழ்க்கையிலும் வெற்றி பெற்று காட்டுவேன்”, என்று அபிஷேக் கூறினார்.
பொதுவாக பெற்றோர்கள் என்றாலே குழந்தைகளை படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டே இருப்பார்கள். குறைந்த மதிப்பெண்களை எடுத்து விட்டால் ஒரு சில வீடுகளில் அடி உதைதான். அதிக மதிப்பெண்களை எடுக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் கூட சில சமயங்களில் “ஏன் முழு மதிப்பெண்களை எடுக்கவில்லை?” என்று திட்டுவதுண்டு. ஆனால் கர்நாடகாவை சேர்ந்த இந்த பெற்றோர் தன்னுடைய மகன் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற போதிலும், அவனை ஊக்குவிக்கும் விதமாக முற்றிலும் வித்தியாசமாக, அவருடைய தோல்வியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது பல பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைகிறது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் உள்ள குழந்தைகள் தோல்வியை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக, தவறான முடிவுகளில் ஈடுபடுகின்றனர். எனவே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளுக்கு பக்க பலமாக இருந்து, அவர்களுடைய வழியில் சென்றே அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இதற்காக குழந்தைகள் பரிட்சையில் தோல்வியுற்றால் உடனே கேக் வெட்டி அதனை கொண்டாட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை செய்யலாம்.


