ஒடிசா சட்டப்பேரவைக்குப் பதிலாகக் கர்நாடக சட்டப்பேரவையின் புகைப்படம், கோனார்க் சூரியக் கோவில் தொடர்பான பாடத்தில் கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள விஜய விட்டலா கோவில் புகைப்படம் எனப் பல தவறான படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, உலக புகழ்பெற்ற அறிவியலாளர் சர் ஐசக் நியூட்டன் ஒரு ‘விமானி’ எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள், தவறான தகவல்கள் என நிரம்பியுள்ள இந்தப் புத்தகங்கள், சரிபார்க்கப்படாத செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்புகளைப் போல உள்ளதாகக் கல்வியலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதிகபட்சமாக 8-ஆம் வகுப்புப் பாடநூல்களில் 705 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல், 7-ஆம் வகுப்பில் 387 பிழைகளும், 6-ஆம் வகுப்பில் 289 பிழைகளும் உள்ளன.
ஒடிசா பாடபுத்தகத்தில் கர்நாடக சட்டப்பேரவையின் புகைப்படம்
இந்த சர்ச்சை பூதாகரமானதை அடுத்து, முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் பிழைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட முதலமைச்சர், மேம்பாட்டு ஆணையர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து, 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
நடப்புக் கல்வியாண்டிற்கான 2.98 கோடி புதிய பாடநூல்களை ஒடிசா பள்ளிக்கல்வித்துறை அச்சிட்டத்துள்ளது. இருப்பினும், வல்லுநர்கள் அடங்கிய முதன்மைக் குழுவின் முறையான ஆய்விற்கு உட்படுத்தப்படாமலேயே அவசர அவசரமாக அச்சிட அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, என்சிஇஆர்டி பாடநூல்களை எவ்விதக் கூடுதல் சரிபார்ப்புமின்றி அப்படியே மேம்போக்காக மொழிபெயர்த்ததே இத்தனை ஆயிரம் பிழைகளுக்கும் மூலகாரணம் என்று கூறப்படுகிறது.
பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பும் சீர்குலைந்துள்ளதாக பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இது ஒடியா மண்ணின் மீதும் ஒடியா மொழியின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல். மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது எவ்விதப் பிழைகளுமற்ற புதிய பாடநூல்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ପ୍ରଥମରୁ ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀ ଓଡ଼ିଆ ପାଠ୍ୟପୁସ୍ତକରେ ଶହଶହ ଭୁଲ ବାହାରିବା ବିଜେପି ସରକାରର ଅତ୍ୟନ୍ତ ଦାୟିତ୍ବହୀନ ତଥା ଖାମଖିଆଲି ମନୋଭାବକୁ ଦର୍ଶାଉଛି।
ପିଲାମାନଙ୍କୁ ଏ ସରକାର ଠିକ ସମୟରେ ପାଠ୍ୟପୁସ୍ତକ ଯୋଗାଇ ପାରୁନଥିବା ବେଳେ, ମିଳିଥିବା ପାଠ୍ୟପୁସ୍ତକରେ ବି ଅନେକ ଭୁଲ ବାହାରିବା ପିଲାଙ୍କ ପାଠପଢ଼ା ଆଶାକୁ ଭାଙ୍ଗି ଦେଇଛି।
ଶିକ୍ଷା…
— Naveen Patnaik (@Naveen_Odisha) June 17, 2026
இதற்கிடையே, அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், சுமார் ₹40 கோடி மதிப்பிலான பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக கல்வியலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படாமல் இருக்கப் பள்ளிக்கல்வித்துறை சில தற்காலிக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் (எஸ்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையை, “ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அந்தந்தப் பிழைகளைத் திருத்திக் கற்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஒடிசா பள்ளிக் கல்வித் திட்ட ஆணையமும் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எஸ்சிஇஆர்டி முன்னாள் இயக்குனர் நிஹார் பட்நாயக் இது குறித்து கூறுகையில், ” ஆசிரியர்களே அந்தந்த பிழைகளைத் திருத்திக் கற்பிக்க வேண்டும் என்பதில் நடைமுறை சாத்தியமில்லை. புத்தகத்தில் என்ன அச்சிடப்பட்டுள்ளதோ, அதையே முழுமையாக நம்புவதுதான் மாணவர்களின் இயல்பு,” என்றும் சுட்டிக்காட்டினார்.

