குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரவும், மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும் ராஜினாமா செய்துள்ளதாகவும் ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவினருக்கும் ஜெகதீப் தன்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
உடல்நிலையை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், அவரின் ராஜினாமா முடிவு அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று மாலை 5 மணி வரை அவருடன் இருந்ததாகவும், இரவு 7.30 மணியளவில் அவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெகதீப் தன்கரின் உடல்நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றாலும், அவரது திடீர் முடிவுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார்.
இன்று மதியம் ஒரு மணிக்கு அலுவல் ஆலோசனைக் கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்திருந்ததை குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ், நீதித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். ஜெகதீப் தன்கர், தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்திய ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடி அவரை மனம்மாற்ற செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஜெய்ராம் ரமேஷ் இன்று காலை மீண்டும் எக்ஸ் பதிவை வெளியிட்டிருக்கிறார். அது விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், “நேற்று மதியம் 12:30 மணிக்கு, ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு (BAC) தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அவை தலைவர் ஜெ.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறிதுநேர விவாதத்துக்கு பின் மாலை 4.30 மணிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று மதியம் 1:00 மணி முதல் 4:30 மணி வரை ஏதோ தீவிரமான ஒன்று நடந்திருக்க வேண்டும் என்பதை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக தான் ஜெ.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜ்ஜு வேண்டுமென்றே மாலை கூட்டத்தைத் தவிர்த்தனர். இப்போது எல்லோருக்கும் அதிர்ச்சியாக ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமாவிற்கு உடல்நலக் காரணங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதை நாம் மதிக்க வேண்டும். எனினும், இதற்குப் பின்னால் வேறு ஆழமான காரணங்கள் உள்ளன என்பது உண்மை.
2014-க்குப் பிந்தைய இந்தியாவை எப்போதும் பாராட்டிய ஜெகதீப் தன்கர் அதேவேளையில் விவசாயிகள் மற்றும் நீதித்துறை நலன்கள் குறித்து அச்சமின்றி வெளிப்படையாக பேசினார். பொதுவாழ்வில் அதிகரித்து வரும் ஆணவப் போக்கையும் கடுமையாக விமர்சித்தார். தற்போதைய ஆட்சிக்காலத்தில் முடிந்தவரை எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாக இருக்க முயன்றார். எதிர்க்கட்சிகளுக்கு முடிந்தவரை இடம்தர முயன்றார்.
விதிகள், நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றினார். எனினும், இந்த விஷயங்களில் அவரின் பங்கு குறைந்த மதிப்பிடுவதாகவும் உணர்ந்திருந்தார். தன்கரின் ராஜினாமா அவரைப் பற்றி நிறைய கூறுகிற அதே நேரத்தில், அவரை துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்த்தியவர்களின் நோக்கங்கள் குறித்த கேள்விகளையும் இது எழுப்புகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 22, 2025 1:20 PM IST