சிரம்பான்.
வெறும் ஆறு வயதிலேயே, டி. தேவக்ஷேன் (D. Devakshean) என்ற சிறுவன், 65 நாடுகளின் நாணயங்களை ஒரே நிமிடத்தில் சரியாக அடையாளம் காணும் சிறப்பு திறமையால், மலேசியா சாதனை புத்தகத்தில் (MBR) இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்.

இந்த சிறப்பான சாதனைக்கு, ‘ஒரே நிமிடத்தில் ஒரு குழந்தையால் அடையாளம் காணப்பட்ட அதிகமான வெளிநாட்டு நாணயங்கள்’ என்ற வகையில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“அவருக்கு ஒரு வயதிலேயே தேசிய கொடிகளில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முன்னரும் மலேசியா தேசியக் கொடியை சரியாக அடையாளம் காணும் திறமை இருந்தது,” என அவரின் தாயார் நெகிரி செம்பிலானை சேர்ந்த ஜி. தேவமலர் (வயது 37), கூறினார்.
“படங்களையோ அல்லது கொடிகளையோ காட்டும்போது உடனே மனதில் பதிந்து விடுவார். அதனால்தான், இரண்டு வயதில் உலகின் 200 நாடுகள் மற்றும் நகரங்களை அடையாளம் காணும் சாதனையும் செய்தார்,” தனது மகனின் திறமையை மேலும் ஊக்குவிக்க தனது கணவர் ஏ. தேவகுமரன் (வயது 41) மற்றும் தாமும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம் என்றும் கூறினார்.
“ஒரு மாத பயிற்சிக்குப் பிறகுதான், இந்த சாதனைக்காக MBRக்கு விண்ணப்பித்தோம். என் மகன் யூடியூப்பில் நாட்டுப்பற்றிய வீடியோக்களை பார்க்கும் ஆர்வம் கொண்டவன். அதைப் பார்த்து தான் நாணயங்களை உணர்ந்தார். விளையாடுவதைவிட புத்தகங்களை வாசித்து கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்,” என்றார் அவர்.
தனது மகனின் இத்திறமை அவருக்கு Guinness World Records போன்ற வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், அவரது திறமைகள் மேலும் விரிவடைய வேண்டும் என்றும் தேவமலர் விருப்பம் தெரிவித்தார்.
செப்டம்பர் 10, 2019-ல் பிறந்த தேவக்ஷேன், “எனக்கு மலேசிய கொடியைப் பிடிக்கும். கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் எனக்குப் பிடித்த பாடங்கள். நான் வளர்ந்து தீயணைப்பாளராக ஆக விரும்புகிறேன்,” என மகிழ்ச்சியுடன் கூறினார்.




