Last Updated:
ஸ்விக்கியில் இந்த ஆண்டில் 9 கோடியே 30 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், ஒரு நிமிடத்திற்கு 194 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர் மக்கள்…!
2025ஆம் ஆண்டு இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 10வது ஆண்டாக பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. ஒரு விநாடிக்கு 4 பிரியாணி என்ற வீதம் ஒரு நிமிடத்தில் 194 பிரியாணி என நடப்பாண்டில் 9 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரியாணியை டெலிவரி செய்தது தெரிய வந்துள்ளது. இதில் சிக்கன் பிரியாணி மட்டும் 5 கோடியே 77 லட்சம் டெலிவரி செய்ததாக ஸ்விக்கி கூறியுள்ளது.
பிரியாணியைத் தொடர்ந்து பர்கர் 2வது இடத்தில் உள்ளது. நடப்பாண்டில் 4 கோடியே 42 லட்சம் பர்கர்கள் ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 4 கோடியே 1 லட்சம் பீட்சாக்களும், 2 கோடியே 62 லட்சம் தோசைகளும் ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

இனிப்பு வகைகளில் சாக்லேட் கேக் 70 லட்சம் ஆர்டர்களுடன் முதலிடத்திலும், குலோப் ஜாமூன் 45 லட்சம் ஆர்டர்களுடன் 2வது இடத்திலும் உள்ளதாக ஸ்விக்கி கூறியுள்ளது. மும்பையைச் சேர்ந்த உணவுப் பிரியர் ஒரு நாளுக்கு 9 ஆர்டர்கள் வீதம் நடப்பாண்டில் அதிகபட்சமாக 3,196 ஆர்டர்கள் புக்கிங் செய்து முதலிடம் பிடித்துள்ளார். அதேநேரம் புனேவை சேர்ந்த ஒருவர் தனி ஒருவனாக ஸ்விக்கியில் ரூ. 1,73,000 ரூபாய்க்கு ஆர்டர் செய்து பிரம்மிக்கச் செய்துள்ளார்.


