Last Updated:
“கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால் நரகத்துக்கு செல்வார்கள். ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அழிக்க உத்தரவிட்டுள்ளேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. கடந்த 8 ஆம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தன. இதையடுத்து, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு நேரடியாக ஈரான் அதிகாரிகள் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்தியது. 21 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதாக ஜே.டி. வான்ஸ் கவலை தெரிவித்தார்.
அணு ஆயுதத் தயாரிப்பை கைவிடுவதாக ஈரான் உறுதியளிக்கவில்லை என்றும் ஜே.டி.வான்ஸ் குற்றஞ்சாட்டினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது அமெரிக்காவிற்கு ஒரு கெட்ட செய்தி என்பதை விட, ஈரானுக்குத்தான் மிகப் பெரிய கெட்ட செய்தி என்றும் ஜே.டி.வான்ஸ் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “எங்கள் மீதோ அல்லது அமைதியான கப்பல்கள் மீதோ துப்பாக்கிச் சூடு நடத்தினால் நரகத்துக்கு செல்வார்கள். ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அழிக்க உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Apr 12, 2026 10:16 PM IST
“ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும்; நரகத்துக்கு செல்வார்கள்” – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை


