Last Updated:
அம்மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அமலில் உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாததால் பெட்ரோல் கொடுக்க மறுத்த பங்க் ஊழியர் மீது இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், பிந்த்-குவாலியர் தேசிய நெடுஞ்சாலை அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 5 மணியளவில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அம்மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அமலில் உள்ளது. அதனால், பங்க் ஊழியர் 55 வயதான தேஜ் நாராயண் நர்வாரியா அவர்களுக்கு பெட்ரோல் வழங்க முடியாது எனக் கூறி மறுத்துவிட்டார்.
இதனால் பைக்கில் வந்த நபர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய அவர்கள், இருசக்கரவாகனத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பங்க் ஊழியர் தேஜ் நாராயணை சுட்டுள்ளனர். இதில் அவரின் கையில் தோட்டா பாய்ந்து படுகயாமடைந்துள்ளார். காயமடைந்த நர்வாரியாவை சக ஊழியர்கள் உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளிலின் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். பங்க் ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
September 01, 2025 7:37 PM IST


