கோலாலம்பூர்:
ஹெலிகாப்படரை ஏற்றி வந்த ஒரு டிரெய்லர் லோரி தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து நேற்று இரவு ஒரு போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் சான் மாமாட் தெரிவித்துள்ளார்.
அந்த டிரெய்லர் லோரி, ஷா ஆலம்–கெசாஸ் நெடுஞ்சாலையிலிருந்து சுபாங் ஜெயா, பெர்சியாரான் கெவாஜிப்பான் சாலையை நோக்கிச் சென்றபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போலீசார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீண்ட டிரெய்லர் லோரி, போதுமான பாதுகாப்பு இடைவெளியின்றி ஹெலிகாப்படரை ஏற்றிக் கொண்டு மிகச் சிரமமான சூழ்நிலையில் அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியதால், அம்புலன்ஸ் வண்டி கூட செல்ல முடியாத அளவிற்கு கடும் அசௌகரியம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.




