ஈரான் நாட்டு அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் அவருடன் வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பயணித்த நிலையில் அனைவரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் பகுதியில் ஈரான் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரான் நாட்டின் அதிபராக இப்ராகிம் ரைசி இருந்து வருகிறார். இவர் இன்று, தலைநகர் டெஹ்ரானில் இருந்து வடமேற்கில் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில், அசர் பைஜான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் சென்றார். அவருடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியான், மாகாண ஆளுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனர். புதிதாக கட்டப்பட்ட அணையை திறந்து வைப்பதற்காக ஈரான் அதிபர் ஜோல்பாவுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் திரும்பும் வழியில் ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர், ஆபத்தான காட்டுப்பகுதியில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் பலமுறை கவனம் பெறும் ஈரான் நாட்டுடைய அதிபர் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது நிலைமை என்ன ஆனது என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கம் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க – ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது திடீர் துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி சம்பவம்
63 வயதாகும் இப்ராகிம் ரைசி 2021 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தார். இவரது தலைமையின் கீழ் ஈரான் நாடு அதிக அளவு யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகவும், சர்வதேச அமைப்புகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தானது குறித்தும், அவரது நிலைமை என்ன ஆனது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
