ஹெச்1பி விசா.. இனி சின்ன தவறு செய்தாலும் ரூ.2.4 கோடி அபராதம்.. அதிர்ந்துபோன ஐடி நிறுவனங்கள்!
அமெரிக்க அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. முதலில் விசா விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கையைக் குறைக்கவும், அதிக திறன் வாய்ந்த நபர்களை மட்டுமே அமெரிக்காவுக்கு ஈர்க்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் விசா லாட்டரி முறையை மாற்றி, சம்பள அடிப்படையிலான தேர்வு முறையைக் கொண்டு வந்தது.
இதன் பின்பு முதலீட்டு வாயிலாக கிரீன் கார்டு பெறும் EB-5 விசா விண்ணப்பத்திற்கான கட்டணத்தை 100 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியது, இப்பிரிவில் வருவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியது. தற்போது ஹெச்-1பி விசா விண்ணப்பம் செய்யும் நிறுவனங்களுக்குப் பெரிய முட்டுக்கட்டை போட்டு உள்ளது அமெரிக்க அரசு.

ஏற்கனவே அதிகளவில் ஹெச்-1பி விசா முறையைப் பயன்படுத்தும் நிறுவனங்களையும், அதன் செயல்பாடுகள், தேர்வு முறைகள், ரீப்ளேஸ் செய்யப்படும் அமெரிக்க ஊழியர்கள் எனப் பல விஷயங்களைக் கண்காணிக்கத் துவங்கியுள்ளது.
இந்த கண்காணிப்பின் நீட்சியாக H-1B விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் H-1B Visa Fraud Crackdown Act என்ற மசோதா அக்டோபர் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதா ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்தால் H-1B விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள், விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மீது 2.5 லட்சம் டாலர் வரையிலான அபராதம் விதிக்கும் அதிகாரம் அமெரிக்க அரசுக்குக் கிடைக்கும்.
தற்போது வெறும் 35000 டாலர் அபராதம் போடப்படும் நிலையில் இருந்து 2.5 லட்சம் டாலராக உயர்த்தப்பட்டு உள்ளது, இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2.4 கோடி ரூபாயாகும், இது ஒரு ஊழியரை பணியில் அமர்த்தி லாபம் ஈட்டுவதை விட அதிகம் என்பதால் இந்த அபராதமே பல குற்றங்களைத் தடுக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் இந்த மசோதா மூலம் விதிமுறை மீறும் நிறுவனங்கள் குடியுரவு சேவை பெறுவதில் தற்போது இருக்கும் 3 ஆண்டு தடையை 10 வருடத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து ஹெச்1பி விசா மூலம் வெளிநாட்டில் இருந்து குறைவான சம்பளத்தில் ஊழியர்கள் பணியில் அமர்த்துவது மூலம் அமெரிக்கர்கள் தங்களுடைய பணியை இழக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டி வருகிறது. இதைத் தடுக்கவே, அடுத்தடுத்து விசா நடைமுறையில் கட்டுப்பாடுகள் வருகிறது.

