புதுடெல்லி: உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட ‘க்ரெட்டா என் லைன்’ கார்களை ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கார்கள் தயாரிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹுண்டாய் நிறுவனம் ஏற்கெனவே 13 வகையான மாடல் கார்களை சந்தைப்படுத்தி உள்ளது. இந்நிலையில் புதிய வகை தயாரிப்பான க்ரெட்டா என் லைன் கார்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி டெல்லி ஏரோசிட்டியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹுண்டாய் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆன் சூ கிம், “இளம் வயதினர், பெண்கள், விளையாட்டு வீரர்களை கவரும் வகையில் க்ரெட்டா என் லைன் கார்கள் நிச்சயமாக இருக்கும். இந்தியாவில் கார் வாங்குவோரின் மனநிலை மற்றும் இந்திய சாலைகளின் நிலை ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் இந்த மாடலை வடிவமைத்துள்ளோம். மொத்தம் 70 வகையான உயர் பாதுகாப்பு அம்சங்கள் இந்த மாடலில் இடம்பெற்றுள்ளன” என்றார்.
5 இருக்கைகளை கொண்ட க்ரெட்டா என் லைன் கார், ஒருலிட்டர் பெட்ரோலுக்கு 18 கி.மீ.வரை செல்லும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஹுண்டாய் நிறுவனத்தை மேலும் மேம்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
க்ரெட்டா என் லைன் கார் அறிமுக நிகழ்ச்சியில் ஹுண்டாய் நிறுவன பொது மேலாளர் அபிஷேக் பெர்ரி, சிஓஓ தருண் கார்க், தலைமை உற்பத்தி அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
மின் வாகன உற்பத்தி: நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஹுண்டாய் நிறுவன சிஓஓ தருண் கார்க் கூறுகையில், “மத்திய அரசு மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், மின்வாகன தயாரிப்பில் கூடுதல்கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அதிகரிக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டிவருகிறோம்” என்று தெரிவித்தார்.