அமெரிக்காவின் நியூயார்க் நகர நிர்வாகத்தின் மீது 2018-ம் ஆண்டு ஜமிலா கிளார்க், அர்வா அஜீஸ் ஆகிய இரு பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், “2017-ம் ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கையை மீறியதாக எங்களைக் கைது செய்தார்கள். ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லை. எங்களைக் கைது செய்தபோது புகைப்படம் எடுக்க எங்களின் ஹிஜாபை அகற்ற வற்புறுத்தினார்கள். அப்போது எங்களின் தனிமனித உரிமைகள் மீறப்பட்டதாக உணர்ந்தோம்.

ஹிஜாப்களை அகற்றுமாறு எங்களைக் கட்டாயப்படுத்திய சம்பவம் எங்களை அவமானப்படுத்தியதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் உணர்ந்தோம். ஹிஜாப் அகற்றுமாறு கட்டாயப்படுத்தியது, முழு உடல் சோதனைக்கு உட்படுத்தியது போன்ற வலியைத் ஏற்படுத்தியது. நாங்கள் அனுபவித்த அந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்கவும் முடியவில்லை. எனவே இது தொடர்பாக விசாரித்துத் தீர்வு தரவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர். இதே காரணத்தை முன்வைத்து சுமார் 3,600 பேருக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனலிசா டோரஸின், “காவல்துறையின் ஆவணங்களுக்காகப் புகைப்படம் பதிவு செய்யும் போது, ஹிஜாப் அணிந்திருக்கலாம் என 2020-ல் நியூயார்க் காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால் முகம் வெளிப்படையாகத் தெரியும்படி மட்டும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 17.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.145 கோடியே 75 லட்சம்) இழப்பீடாக வழங்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை நியூயார்க் நகர நிர்வாகம் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. இந்த இழப்பீட்டுத் தொகையில், 13.1 மில்லியன் சட்ட விவகார கட்டணமாக வசூலிக்கப்படும். 2014 மார்ச் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 7,824 டாலர் முதல் 13,125 டாலர் வரை இழப்பீடாக வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.