ஹார்முஸ் ஜலசந்தியில் காத்துகிடக்கும் கப்பல்கள் யுவானில் வர்த்தத்தை மேற்கொண்டால் மட்டுமே அங்கிருந்து நகர முடியும் என ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈரானின் இந்த நிபந்தனை நடைமுறைக்கு வந்தால், 52 ஆண்டுகால பெட்ரோல்-டாலர் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும். இதனை நாம் புரிந்துக்கொள்ள ஐந்து தசாப்தங்கள் பின்னோக்கி நகர வேண்டும்.
1973 அக்டோபரில் எகிப்து மற்றும் சிரியா தலைமையிலான அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தை அரபு எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு தடை விதித்தது.
இந்தத் தடையால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகக் குறுகிய காலத்தில் சுமார் 4 மடங்கு அதிகரித்தது.. அதாவது, 3 டாலர்களாக இருந்த பீப்பாய் ஒன்றின் விலை 12 டாலர்களாக உயர்ந்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முடங்கியது. தொழிற்சாலைகள் இயங்குவது கடினமானது. போக்குவரத்துச் செலவுகள் விண்ணைத் தொட்டன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. பல நாடுகளில் வார இறுதி நாட்களில் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டது. எரிசக்தி விலை உயர்ந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து “தேக்கவீக்கம்” ஏற்பட்டது. ஆங்கிலத்தில் இதை Stagflation என்று கூறுவார்கள்.
அப்போது அமெரிக்கா தனது பொருளாதாரத்தையும், டாலரின் தேவையையும் நிலைநிறுத்த ஒரு வழியைத் தேடியது. இதற்காக 1974-ஆம் ஆண்டில் சவுதி அரேபியா உடன் அமெரிக்கா வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தை போட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க ஒப்புக்கொண்டது. காலப்போக்கில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’ (OPEC) நாடுகளும் இதையே பின்பற்றின.
இதற்குப் பிரதிபலனாக, சவுதி அரேபியாவிற்குத் தேவையான ராணுவப் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் மற்றும் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பை அமெரிக்கா வழங்கியது. இந்த ஒப்பந்தத்தால், உலகில் எந்த நாடு எண்ணெய் வாங்க விரும்பினாலும் முதலில் அமெரிக்க டாலர்களைச் சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் என எல்லா நாடுகளுக்கும் டாலர் தேவைப்பட்டது. அமெரிக்காவையும் அதன் கொள்கையையும் வெறுத்த நாடுகள் கூட தேடித் தேடி டாலர்களை இருப்பு வைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் டாலருக்கான தேவை அதிகரித்ததால், அமெரிக்காவிற்கு மற்ற நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், வங்கிக் கணக்குகளை முடக்கவும் மிகப்பெரிய அதிகாரம் கிடைத்தது. இதற்குப் பிறகுதான் Petro-dollar என்ற சொல் உலக அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
சில பத்தாண்டுகளுக்கு, அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் தொடர்ந்து.. சில நாடுகள் அமெரிக்க டாலரின் வர்த்தகத்தை தவிர்க்க வேண்டும் என நினைத்து மாற்று வழிகளை ஆராய தொடங்கின. அதில் முக்கியமான ஒரு நாடு ஈரான். 1979-க்கு முன்பு வரை, ஈரான் அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பனாக இருந்தது. அப்போது ஈரானை ஆட்சி செய்த ஷா முகமது ரெசா பஹ்லவி (Shah Mohammad Reza Pahlavi) மன்னருக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்தது. ஆனால், ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி காரணமாக ஷா மன்னர் பதவியிறக்கப்பட்டு நாட்டை விட்டு தப்பியோடினார். அவருக்கு அமெரிக்கா புகலிடம் அளித்தது.
இதனால் கோபமடைந்த ஈரானிய மாணவர்கள் மற்றும் புரட்சியாளர்கள், டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த 52 அமெரிக்க அதிகாரிகளைப் பிணைக்கைதிகளாகப் பிடித்தனர். அவர்களை விடுவிக்க வேண்டுமானால், அமெரிக்காவிடம் தஞ்சம் புகுந்த ஷா மன்னரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்தது.
இந்தச் சம்பவத்திற்குப் பதிலடியாக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter) ஈரான் மீது முதல்முறையாக பொருளாதாரத் தடையை விதித்தார். ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினார். அமெரிக்க வங்கிகளில் இருந்த சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானின் சொத்துக்களை முடக்கினார்.
சர்வதேச பணப் பரிமாற்ற அமைப்பான SWIFT-லிருந்து ஈரான் நீக்கப்பட்டது. இதனால் ஈரான் தனது எண்ணெயை விற்றாலும், அதற்கான பணத்தை சர்வதேச வங்கிகள் மூலம் பெற முடியாமல் போனது. ஈரான் எந்தவொரு சர்வதேச வர்த்தகத்திற்கும் அமெரிக்க டாலரைத் தொடக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. ஈரான் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்தது. ஆனால் அதனை விற்க முடியாமல் தவித்தது. ஈரானின் வருமானத்தில் பெரும்பகுதி எண்ணெய் விற்பனை மூலமே வருகிறது.
ஈரானிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற மற்ற நாடுகளுக்கும் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து, வாங்குதலைக் குறைக்கச் செய்தது. மீறினால் அந்த நாடுகள் மீது “இரண்டாம் நிலைத் தடைகள்” விதிக்கப்படும் என எச்சரித்தது. ஈரானிய எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் காப்பீடு (Insurance) வழங்கத் தடை விதிக்கப்பட்டது. காப்பீடு இல்லாத கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் நுழைவது மிகவும் கடினம்.
1981-இல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், தடைகள் நீக்கப்படவில்லை. ஈரான்-ஈராக் போரின்போது ஈரான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறி அமெரிக்கா கூடுதல் தடைகளை விதித்தது. 2000-களுக்குப் பிறகு, ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சிப்பதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய நாடுகளையும் சேர்த்து அமெரிக்கா மிகக் கடுமையான தடைகளை அமல்படுத்தியது…
இதுவே ஈரான் – அமெரிக்கா இடையிலான 40 ஆண்டுகாலப் பகைக்கு அடித்தளமாக அமைந்தது.. 2015-இல் ஒபாமா காலத்தில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுச் சில தடைகள் நீக்கப்பட்டன. ஆனால் 2018-இல் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி, Maximum Pressure என்ற கொள்கையின் கீழ் மீண்டும் அனைத்துத் தடைகளையும் அமல்படுத்தினார். இது ஈரானிய நாணயமான Rial-லின் மதிப்பை மிகக் கடுமையாக வீழ்த்தியது.
இப்படி கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில், ஈரான் புதிய பார்ட்னரை தேடியது. அந்த புதிய பார்ட்னர் சீனா. மிகப்பெரிய நாடான சீனாவுக்கு அதிக அளவிலான எரிசக்தி தேவைப்படுகிறது. மற்றொரு புறம் ஈரான் அதிக எண்ணெய் உற்பத்தி செய்தும் வாடிக்கையாளர் இல்லாமல் தவித்தது… இது இரண்டு நாடுகளையும் இயற்கை கூட்டாளிகளாக மாற்றியது.
இந்த இயற்கை கூட்டாளிகள் 2021-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஒன்றை செய்துக்கொண்டனர். இந்த 25-year Comprehensive Strategic Partnership உலக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.. அமெரிக்காவின் “அதிகபட்ச அழுத்தம்” மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு ஒரு பெரிய பொருளாதார Lifeline ஆக அமைந்தது…
அடுத்த 25 ஆண்டுகளில் ஈரானின் எரிசக்தி, வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகங்கள் மற்றும் இரயில்வே போன்ற துறைகளில் சுமார் 400 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய சீனா ஒப்புக்கொண்டது. இதற்குப் பதிலாக, ஈரான் அடுத்த 25 ஆண்டுகளுக்குச் சீனாவுக்குத் தடையின்றி கச்சா எண்ணெயை மிகக் குறைந்த விலையில் வழங்க ஒப்புக்கொண்டது.
ஈரான் மற்றும் சீனா இடையிலான வர்த்தகம் அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீன யுவான் (Yuan) அல்லது இரு நாடுகளின் உள்ளூர் கரன்சிகளில் நடைபெறும். இது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை முறியடிக்கவும், டாலர் ஆதிக்கத்தைக் குறைக்கவும் ஈரான் மற்றும் சீனா எடுத்த தந்திரமான நடவடிக்கையாகும். சீனாவின் பிரம்மாண்டத் திட்டமான Belt and Road Initiative-வில் ஈரான் ஒரு முக்கிய அங்கமாக மாறும். இதன் மூலம் சீனா மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும்..
பொருளாதார உறவு மட்டுமின்றி, இரு நாடுகளும் ராணுவப் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் ஆயுதத் தயாரிப்பு போன்ற துறைகளிலும் ஒத்துழைக்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் கொடுத்த தைரியத்தில்தான் ஈரான் இப்போது “எண்ணெய் வேண்டுமானால் யுவானில் பணம் கொடுங்கள்” என்று ஹார்முஸ் ஜலசந்தியில் உலக நாடுகளுக்கு நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்க டாலரை தவிர்த்து விட்டு, யுவானில் வர்த்தகம் செய்ய வேண்டும் என சீனா பல தசாப்தங்களாக திட்டமிட்டு வருகிறது. அதுவும் மிகவும் அத்தியாவசியமான கச்சா எண்ணெய் வர்த்தகம் யுவானில் நடந்தால் சீனா பெரும் ஆதாயங்களுக்கு அளவே இல்லை. தற்போதைய போரில், அமெரிக்காவின் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் பிரமாண்ட போர் கப்பல்களுக்கு ஈரானால் ஈடு கொடுக்க முடியாது…
ஆனால் ஈரான் தனது புவிசார் அரசியல் சாதகத்தை பயன்படுத்தி, உலக நாடுகளை டாலரிலிருந்து யுவானுக்கு மாறக் கட்டாயப்படுத்துவது ஒரு மிகச்சிறந்த “பொருளாதாரப் போர்முறை” என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.. ஈரான் கொண்டுள்ள மிகப்பெரிய பலம் ஹார்முஸ் ஜலசந்திஉலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் 25% திரவ இயற்கை எரிவாயு (LNG) இதன் வழியாகத்தான் சென்றாக வேண்டும்..
சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் இந்த வழியைத் தவிர்த்துவிட்டு எளிதாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், எண்ணெய் விலை உயர்வைத் தடுக்கவும் வேறு வழியின்றி யுவானைப் பயன்படுத்த முன்வரும் சூழலை ஈரான் உருவாக்கியுள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா எப்படி எதிர்கொள்ளும். அமெரிக்கா தனது அதி நவீன படையை ஹார்முஸ் ஜலசந்திக்கு கொண்டுச் செல்லும்… ஈரான் மீதான வான் தாக்குதலை அதிகரிக்கும். மற்றொரு புறம் பொருளாதார தடைகளை மேலும் வலுவாக்கும். ஈரானின் கச்சா எண்ணெய் வாங்கும் சீன கப்பல்களை உலக அளவில் தனிமைப்படுத்தும்.
டாலர் அல்லாத பணவரிவர்த்தனையை ஏற்க கூடாது என மிகப்பெரிய வங்கிகளை நிர்பந்திக்கும். ஆனால் சீனா இதற்கு செவிசாய்க்காமல் போனால், சீனாவை கட்டாயப்படுத்துவது அமெரிக்காவால் முடியாத காரியம். சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்தால், பெட்ரோ-டாலர் வர்த்தகமே தொடர்ந்து ஆதிக்கம் செய்யும்.. ஐரோப்பிய நாடுகள் சில ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டன. ஆனால் யுவான் வர்த்தகத்திற்கு வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவில்லை.
தங்களது பொருளாதார வளர்ச்சிக்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை பெரிதும் நம்பியுள்ளதால், அவை சார்பு நிலையை எடுக்காமல் இருந்துவிடும். மற்றொரு புறம் ரஷ்யா, உக்ரைன் போரால் பொருளதார தடைகளில் சிக்கி தவிக்கும் இதற்கு மௌனமாக ஆதரவு அளிக்கும். ஏற்கெனவே ரஷ்யா தனது ரூபிள் மூலமாகத்தான் பெரும்பாலான வர்த்தகத்தை செய்து வருகிறது.
BRICS நாடுகளான இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகியவை, முற்றிலும் டாலரை தவிர்க்க முடியாது. ஆனால் படிப்படியாக அதன் பயன்பாட்டை குறைக்க தொடங்கும். வெகு சில நாடுகள் கூட யுவான் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டால் வரலாற்றில் இது வரை இல்லாத ஒரு புதிய பரிவர்த்தைனை தொடங்கும். ஒரு பொருள் இரண்டு விதமான கரன்சிகள் என்பது தான் அது.
உதாரணத்திற்கு மேற்கத்திய நாடுகள் டாலர் வர்த்தகத்தை தொடர்ந்து பயன்படுத்தும். சீனா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் யுவான் அடிப்படையிலான வர்த்தகத்தை தொடங்கும். ஒருவேளை பல நாடுகள் யுவானைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தைப் பெருமளவு குறைக்கும். இது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை ராணுவ ரீதியிலிருந்து பொருளாதார ரீதியாக மாற்றும்.
எரிசக்தி விநியோகம் ஒரு குறிப்பிட்ட நாட்டின் நாணயத்தைச் சார்ந்து அமையும் போது, அது உலகச் சந்தையில் நிலையற்ற தன்மையை உருவாக்கும். ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவது உலகிற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அது எந்த நாணயத்தில் திறக்கப்படுகிறது என்பதும் முக்கியமானது.
