மும்பை: ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக டெல்லி அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். அது முதலே ரசிகர்கள் அவரை விமர்சசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் தலைமையிலான மும்பை அணி இந்த சீசனின் முதல் மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.
கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக வான்கடேவில் விளையாடி இருந்தது. அப்போது மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் முழக்கமிட்டனர். அதேநேரத்தில் ஹர்திக்கை காட்டமாக வசைபாடி விமர்சித்தும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை வசைபாட கூடாது. அவர் மீது வன்மத்தையும் வெளிப்படுத்தக் கூடாது. அவரை ஃப்ரான்சைஸ் அணி நிர்வாகம்தான் கேப்டனாக நியமித்தது. இது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருக்கின்ற வழக்கமான நடைமுறைதான். இதில் ஹர்திக்கின் தவறு ஏதும் இல்லை. அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரோகித் சர்மா வேறு ரகமான வீரர். ஃப்ரான்சைஸ் மற்றும் இந்திய அணிக்கான அவரது செயல்பாடு தரமானதாக இருக்கும். அது கேப்டனாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி” என கங்குலி தெரிவித்தார்.