Last Updated:
ஹரியானாவில் 3 வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மருத்துவர்களின் கோரிக்கைதான் என்ன?
ஹரியானா மருத்துவ சேவை சங்கம் சார்பாக (Haryana Civil Medical Services (HCMS) Association), மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர்களின் முக்கியமான சில கோரிக்கைகளை ஹரியானா அரசு ஏற்காததை அடுத்து இந்தப் போராட்டம் கடந்த 8ஆம் தேதி, இரண்டு நாட்களுக்கான போராட்டம் என்ற அறிவிப்புடன் Haryana Civil Medical Services (HCMS) Association மூலமாக இப்போராட்டம் தொடங்கப்பட்டது. அது நாளுக்கு நாள் தீவிரப்பட்டு வருகிறது. போராடும் மருத்துவர்களின் முக்கிய கோரிக்கைகளாக முதுநிலை மருத்துவ அதிகாரிகள் பணிக்கான நேரடி நியமனம் நிறுத்தப்பட வேண்டும், மேம்பட்ட மருத்துவப் பணி முன்னேற்ற திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் போன்றவை உள்ளன. போராட்டம் தொடர்வதால், அங்குள்ள நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போதைக்கு அவசர தேவைகள், பிரேத பரிசோதனைகளை செய்ய மருத்துவக் கல்லூரிகள், NHM, ஆயுஷ் துறையை சேர்ந்த மருத்துவர்கள், ஓய்வுபெற்ற மருத்துவர்கள், சமூக சுகாதார அதிகாரிகள் ஆகியோரை மாநில அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும் அல்ட்ராசவுண்ட், சி.டி. ஸ்கேன், அறுவை சிகிச்சைகள் தொடர்பான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
‘வேலை செய்யாத நாட்களுக்கு ஊதியம் இல்லை’ என்ற கொள்கையை அமல்படுத்தி, ஹரியானா சுகாதாரத் துறை, மறு உத்தரவு வரும் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் சம்பளத்தை விடுவிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
December 10, 2025 4:33 PM IST


