இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்தும், ஈரானில் இருக்கும் தற்போதைய நிலை குறித்தும், ஜெர்மனியில் வசித்து வரும் ஈரானிய பத்திரிகையாளரும், மத்திய கிழக்கு அரசியல் ஆய்வாளருமான ரெஸா தலேபியிடம் காணொளி வாயிலாக பேசினோம்…!
“என் குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசினேன். நலமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படும் என்ற அச்சத்துடன்தான் மக்கள் தூங்கச் செல்கின்றனர். ஈரான் – ஈராக்கோடு நடந்த போர், அதன் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு அரசு ஒடுக்குமுறை அதைத் தொடர்ந்து இப்போது இஸ்ரேலின் தாக்குதல் என நிலைமை ஈரானில் கடுமையாகத்தான் இருக்கிறது.”

“ஈரான் பல ஆண்டுகளாக அணு சக்தி திட்டத்தில் கவனத்தை செலுத்தி வருகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான அந்த திறனை இன்னும் சில வாரங்களில் எட்டிவிடும் நிலையில்தான் இருக்கிறது. ஆனால், இப்போது இஸ்ரேல் ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால், அணு ஆயுதம் தொடர்பான ஈரானின் லட்சியம் இன்னும் வலுவடையலாம். ஆனால், இதைக் காரணம் காட்டி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது. குறிப்பாக இஸ்ரேலே அணு ஆயுதம் வைத்திருக்கும்போது, ஈரானை அச்சுறுத்தல் என்று இஸ்ரேல் எப்படி சொல்ல முடியும்? ஈரானில் உள்ள ஆட்சி மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுகிறது என்பது உண்மைதான், அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அந்த காரணத்துக்காக, ஈரான் மீது அந்நிய சக்திகளின் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது.”

