குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் கீர்த்தி படேல். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வந்தவர், தனது ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். குழந்தைகளுக்கு உதவுவது, பிரச்சினைகளை கண்டு பொங்கி எழுவது என ஒரு ANGRY BIRD ஆக உலாவியுள்ளார்.
அதேவேளையில், மது பானத்துடன் மயங்குவது, போலீஸ் உடையில் மிரட்டுவது என விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கீர்த்தி படேல், மேடைகளில் ஆட்டம் போட்டு, தன்னை ஒரு செலிபிரிட்டியாக காட்டிக்கொண்டுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் இவரை, 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்துள்ளனர்.
இன்ஸ்டாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்த கீர்த்தி படேல், குறுக்கு வழியில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக, இன்ஸ்டா வீடியோவுக்காக இனிக்க இனிக்க பேசியவர், ஹனிட்ராப் மோசடி மூலம் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு மாய வலை விரித்துள்ளார். அவரின், பேச்சைக் கேட்டு கிரங்கிய BUILDER-யிடம் தனது சித்து வேலையை காட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் மாய வலையில் வசமாக மாட்டிக் கொண்ட ரியல் எஸ்டேட் அதிபரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான புகாரில், கீர்த்தி படேலின் கூட்டாளிகள் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். ஆனால், இன்ஸ்டா பிரபலம், தனது செல்போன் எண் மற்றும் ஐபி முகவரி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொண்டு ஊர் ஊராக சென்று பதுங்கியுள்ளார்.
மோசடி புகாரில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இருப்பினும், சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரைணையில், தொழில்நுட்ப உதவியுடன் கீர்த்தி படேல் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ் நகருக்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்தவரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், கீர்த்திக்கு எதிராக நில அபகரிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் அம்பலமாகியுள்ளது. எனவே, அவரிடம் யார் யார் ஏமாந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹனிட்ராப் மோசடி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த இன்ஸ்டா பிரபலம் கைது செய்யப்பட்ட சம்பவம் சூரத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
June 19, 2025 9:38 PM IST

