ஷா ஆலம், பிப்ரவரி 20, 2026:
இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 6,000 யாத்ரீகர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காகச் சிலாங்கூர் மாநில அரசு RM9 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ Seri அமிருடின் ஷாரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட RM1,000 நிதியுதவி, இந்த ஆண்டு RM1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த 6,000 யாத்ரீகர்கள் தலா RM1,500 நிதியுதவியைப் பெறுவார்கள்.
இந்த நிதியுதவியைப் பெற விரும்பும் தகுதியுள்ள யாத்ரீகர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றலாம்:
பிப்ரவரி 23 முதல் ஜூலை 15, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
அந்தந்தப் தொகுதி சமூக சேவை மையங்கள் (Pusat Khidmat Masyarakat) அல்லது மாநிலச் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் போது, ‘Muas’ குறியீடு (Muas Code) அடங்கிய 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் விமானப் பயண அட்டவணையின் (Haj Flight Schedule) அச்சு நகலை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது.
2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 18,000 யாத்ரீகர்கள் பயனடைந்துள்ளனர். 2022 மற்றும் 2023-இல் தலா 3,000 பேரும், 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் தலா 6,000 பேரும் இந்த உதவியைப் பெற்றுள்ளனர்.
இந்த நிதியுதவி புனிதப் பயணத்திற்குத் தயாராகும் ‘இறைவனின் விருந்தினர்களுக்கு’ (Dhuyufurrahman) பேருதவியாக இருக்கும் என்று அமிருடின் ஷாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




